தர்மபுரி 4 ரோடு ரவுண்டானாவில் அதியமான்–அவ்வையார் சிலை அருகே கிடந்த மர்ம சூட்கேஸ் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

தர்மபுரி 4 ரோடு ரவுண்டானாவில் அதியமான்–அவ்வையார் சிலை அருகே மர்ம சூட்கேஸ் கிடந்தது. இதுதொடர்பாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள்.

Update: 2019-04-20 22:45 GMT

தர்மபுரி,

தர்மபுரி 4 ரோடு ரவுண்டானாவின் மையப்பகுதியில் அதியமான்–அவ்வையார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2 சிலைகளின் மையப்பகுதியில் நேற்று காலை ஒரு மர்ம சூட்கேஸ் வைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சூட்கேசுக்குள் வெடிகுண்டு ஏதேனும் இருக்குமோ? என்று சந்தேகமடைந்த அவர்கள் இதுபற்றி தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுதொடர்பாக வெடிகுண்டு பரிசோதனை நடத்தும் நிபுணர் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சற்று நேரத்தில் அங்கு வந்த வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அந்த சூட்கேசை திறந்தனர்.

அந்த சூட்கேசுக்குள், மஞ்சள், குங்குமம் மற்றும் லேகியம் ஆகியவை இருந்தன. சில சான்றிதழ்களும் இருந்தன. சூட்கேசுக்குள் இருந்த சான்றிதழ்களை போலீசார் பார்வையிட்டனர். பெட்டிக்குள் சக்திவேல் என்பவரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. செல்லத்துரை என்ற பெயரில் ஒரு அடையாள அட்டை எழுத்துக்கள் அழிந்த நிலையில் இருந்தது. வெடிபொருட்களோ, வெடிகுண்டோ சூட்கேசுக்குள் இல்லை. இதையடுத்து அந்த சூட்கேஸ் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்த நிலையில் 4 ரோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். மாற்றுதிறனாளிகள் யாராவது இந்த பெட்டியை அங்கு வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த சூட்கேசை அங்கு கொண்டு வந்து வைத்தவர்கள் யார்? எதற்காக வைத்தார்கள் என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்