சேலத்தில் ரிக் வண்டி டிரைவர் மர்மச்சாவு பிணத்துடன் உறவினர்கள் போராட்டம்

ரிக் வண்டி டிரைவர் மர்மமான முறையில் இறந்ததையொட்டி, சேலத்தில் பிணத்துடன் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2019-04-20 22:30 GMT

சேலம், 

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 38). இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வெங்கடாசலம் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருடைய ரிக் வண்டியில் டிரைவராக பணியாற்றினார். கடந்த 8–ந் தேதி மத்திய பிரதேசத்துக்கு சென்ற அவர் அங்கு பணியில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் கடந்த 18–ந் தேதி சத்யாவிற்கு போனில் பேசிய ஒருவர், உங்களது கணவர் நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதைக்கேட்டு அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனிடையே வெங்கடாசலம் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் நேற்று சேலம் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரி அருகே வெங்கடாசலம் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது அவருடைய உறவினர்கள் அங்கு திடீரென போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் அவர்கள், வெங்கடாசலம் சாவில் சந்தேகம் இருப்பதால் அவருடைய உடலை மறு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், இதற்கு காரணமான ரிக் வண்டி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வெங்கடாசலம் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்