ஆரணி அருகே மனநிலை பாதித்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் 2 பேர் கைது

ஆரணி அருகே மனநிலை பாதித்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2019-04-20 22:45 GMT

ஆரணி, 

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர். தாய் இறந்துவிட்டதால் அவரது அத்தை பராமரிப்பில் இருந்து வருகிறார். இவர் நேற்று வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றார். அங்கு அந்த இளம்பெண்ணை வெட்டியாந்தொழுவம் கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 53), ரேணுகோபால் என்ற மொட்டை (61) ஆகிய இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இளம்பெண்ணின் சத்தம் கேட்டு அவரது மாமா விரைந்து சென்று அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்–இன்ஸ்பெக்டர் பசலைராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முருகன், ரேணுகோபால் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த இளம்பெண் கர்ப்பமானதாகவும், பின்னர் கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. போலீசார் விசாரணையில் ஏற்கனவே அந்த இளம்பெண்ணை இவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கும், முருகன், ரேணுகோபால் ஆகியோருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்