தேனீக்களைக் காக்க ஜெர்மனியில் சட்டம்
மனிதர்களாகிய நாம் இவ்வுலகில் தொடர்ந்து வாழ, இங்குள்ள ஒவ்வொரு சிறு உயிரினமும் முக்கியம்.
மகரந்தச்சேர்க்கைக்குத் தேனீக்கள் உதவாவிட்டால், தாவரங்களே அழிந்துபோய்விடும், மனித இனமும் முடிவுக்கு வந்துவிடும்.
கவலைக்குரிய வகையில், உலகில் தேனீக்களின் எண்ணிக்கை விரைவாகக் குறைந்துவருவதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், தேனீ உள்ளிட்ட உயிரினங்களையும், தாவரங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று ஜெர்மனியின் பவேரியா பகுதியில் ஒரு தீவிர பிரசார இயக்கம் நடத்தப்பட்டது. அதையொட்டித் தயாரிக்கப்பட்ட கோரிக்கை மனுவில், 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனர்.
அம்மனுவில், தேனீக்கள் அழிவைத் தடுக்கும் வகையில் 20 சதவீத விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தக் கூடாது, இயற்கை உரங்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும், வருகிற 2030-ம் ஆண்டுக்குள் இதை 30 சதவீதமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், தேனீக்களைக் காக்கும் நடவடிக்கைக்காக பவேரியாவின் பத்து சதவீத புல்வெளிகள் பூந்தோட்டங்களாக மாற்றப்பட வேண்டும், ஆறுகளும் நீரோடைகளும் பூச்சிமருந்துகள் மற்றும் செயற்கை உரங்களிடம் இருந்து காக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்த மனுவுக்கு, பவேரிய அரசும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான சட்டம் நிறைவேற்றப்படும் என்றும், அதற்கான மசோதா, வாக்கெடுப்புக்கு விடப்படாமல் நேரடியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்படும் என்றும் அப்பகுதி அரசு அறிவித்திருக்கிறது.