தென்கொரியாவில் ‘செயற்கை’ நிலநடுக்கம்?
தென்கொரியா நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.
தென்கொரியாவில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி 5.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் ஆயிரத்து 500 பேர் தங்கள் வீடுகளை இழந்ததாகவும், 67 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், குறிப்பிட்ட நிலநடுக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஊடகம் ஒன்று, அந்த நிலநடுக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிலநடுக்கத்தை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மார்க்கஸ் ஹாரிங் என்பவர் செயற்கையாக உருவாக்கியதாகவும் அந்த ஊடகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தென்கொரியாவின் போஹாங் பகுதியில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம், அப்பகுதியில் நடத்தப்பட்ட ‘ஜியோதெர்மல்’ எனப்படும் புவி வெப்ப சோதனைகளின் தொடர்ச்சியே எனவும் தெரிவிக்கப்படுகிறது.
புவி வெப்ப ஆய்வு நிபுணரான மார்க்கஸ் ஹாரிங் மீது, கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாசல் பகுதியில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்துக்குக் காரணமானவர் என்று ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.