பிளஸ்-2 தேர்வு குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண்களை அறிந்த மாணவ-மாணவிகள்
கோவையில் குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண்களை மாணவ-மாணவிகள் அறிந்தனர்.
கோவை,
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை விரைந்து அறிந்துகொள்ளவும், வீட்டில் இருந்தபடியே தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளவும் அந்தந்த மாணவ-மாணவிகள் பள்ளிகளில் பதிவு செய்த செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் அனுப்பிவைக்கும் திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டும் நேற்று காலை 9.30 மணியில் இருந்து பிளஸ்-2 மதிப்பெண்கள் மாணவ-மாணவிகளின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. வீட்டிலிருந்தபடியே மாணவ-மாணவிகள் செல்போனில் தேர்வு முடிவுகளை பார்த்து மகிழ்ந்தனர்.
இதில் தேர்ச்சி பெற்ற சில மாணவ-மாணவிகள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை சக மாணவ-மாணவிகள் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிவைத்தனர். மேலும் அருகில் உள்ள வீட்டில் வசித்து வருபவர்களிடமும் காட்டினர்.
ஒருசிலர் தாங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட தேர்வுமுடிவுகளை அந்த செல்போனை முகத்தின் அருகே வைத்துக்கொண்டு மற்றொரு செல்போனில் ‘செல்பி’ எடுத்து வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அத்துடன் உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கோவை ராஜவீதி துணிவணிகர் சங்க மேல்நிலைப்பள்ளி உள்பட ஒருசில பள்ளிகளின் தகவல் பலகையில் மாணவ-மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இதனை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
ஒரு கால கட்டத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் பள்ளிகள் மற்றும் பத்திரிகைகளில் மட்டுமே வெளியிடப்பட்டன. இதனால் தங்கள் தேர்வு முடிவுகள் குறித்து அறிந்து கொள்ள அங்கு மாணவ-மாணவிகளின் கூட்டம் அதிக அளவு இருக்கும். தற்போது கால வளர்ச்சி காரணமாக மாணவ- மாணவகளுக்கு செல்போன் மூலம் தேர்வு முடிவுகள் விரல் நுனியில் கிடைத்துவிடுகின்றன.
இதனால் ஒரு சில மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை. ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு வந்திருந்தனர். மேலும் நேற்று முன்தினம் தேர்தல் பணி மற்றும் நேற்று புனித வெள்ளி என்பதால் ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்களும் வரவில்லை. இதனால் சில பள்ளிகளில் மாணவ-மாணவிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.