‘பணமதிப்பு இழப்பு, வேலை வாய்ப்பு பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?’ பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி

பணமதிப்பு இழப்பு, வேலை வாய்ப்பு குறித்து மோடி வாய் திறக்காமல் இருப்பது ஏன்? என்று ராய்ச்சூரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.

Update: 2019-04-19 23:00 GMT
பெங்களூரு, 

பணமதிப்பு இழப்பு, வேலை வாய்ப்பு குறித்து மோடி வாய் திறக்காமல் இருப்பது ஏன்? என்று ராய்ச்சூரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.

கர்நாடகத்தில் மண்டியா, ஹாசன் உள்பட 14 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.

ராகுல்காந்தி பேச்சு

வருகிற 23-ந்தேதி கர்நாடகத்தில் ராய்ச்சூர் உள்பட 14 தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தல் நடக்கிறது. இந்த 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நாளையுடன் பகிரங்க பிரசாரம் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் வட கர்நாடக பகுதிகளில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் ராய்ச்சூரில் நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி, தான் பிரதமரானால் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வந்து, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் டெபாசிட் செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார். பணமதிப்பு இழப்பு, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், விவசாயிகளுக்கு உதவும் திட்டங்களை அமல்படுத்துவதாகவும் கூறினார். ஆனால் சொன்னது எதையும் செய்து காட்டவில்லை. அதுபற்றி மோடி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?.

விவசாய கடன் தள்ளுபடி

இந்த நாடாளுமன்ற தேர்தல் ஒரு புறம் சகோதரத்துவம், நேர்மை, மற்றொருபுறம் துவேசம் ஆகியவற்றின் இடையே நடக்கிறது. காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ‘நியாய்’ திட்டத்தை கொண்டு வந்து ஏழைகளின் வங்கி கணக்கில் மாதம் ரூ.6,000 வீதம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் செலுத்துவோம்.

நாங்கள் அளித்த வாக்குறுதியின்படி மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் விவசாய கடனை தள்ளுபடி செய்தோம். கர்நாடகத்திலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி கர்நாடகம் வந்து பொய் பேசுகிறார்.

காவலாளி, ஒரு திருடர்

கர்நாடகத்தில் இதுவரை ரூ.11 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடிக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று மோடி கேட்கிறார். நாங்கள், கொள்ளையடித்தவர்களிடம் பணத்தை பறித்து ஏழைகளுக்கு வழங்குகிறோம்.

தன்னை காவலாளி என்று கூறிக்கொள்ளும் மோடி ஆட்சி தான், வங்கிகளில் கடன் பெற்ற விஜய் மல்லையா, நீரவ்மோடி, லலித்மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் லண்டனுக்கு சென்றுவிட்டனர். இந்த காவலாளி (மோடி) என்ன செய்து கொண்டிருந்தார்?. காவலாளி ஒரு திருடர் என்று நாட்டு மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

சிறையில் அடைக்கவில்லை

நாட்டின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை சிறையில் தள்ளுவதாக மோடி கூறினார். ஆனால் இதுவரை அவர்களை சிறையில் அடைக்கவில்லை.

ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் ஒப்பந்தம் கர்நாடகத்தில் உள்ள எச்.ஏ.எல். நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, அதை அனில் அம்பானிக்கு கொடுத்துவிட்டார். இதில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. அனில் அம்பானிக்கு மோடி உதவி செய்துள்ளார்.

மோடி அரசை தூக்கி எறிய...

பணமதிப்பு இழப்பு, வேலை வாய்ப்பு, சரக்கு-சேைவ வரி திட்டம் குறித்து மோடி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?. மோடி 5 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தார் என்பதை மக்களிடம் சொல்ல அவர் விரும்பவில்லை. சரக்கு-சேவை வரி திட்டத்தால் ஏராளமான சிறு வியாபாரிகள் வீதிக்கு வந்துவிட்டனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சரக்கு-சேவை வரி திட்டத்தை எளிமைப்படுத்துவோம். இந்த முறை கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். ஆந்திராவில் மோடிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு போராடுகிறார். குஜராத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் போராடுகிறது. மோடி அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர். மத்தியில் காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமைவது உறுதி.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

சந்திரபாபு நாயுடு

இந்த கூட்டத்தில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சந்திரபாபுநாயுடு தெலுங்கில் பேசி, அங்குள்ள தெலுங்கு மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் செய்திகள்