மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு ‘சீல்’ வைப்பு
மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ‘குளோஸ்‘ என்ற பொத்தானை அழுத்தி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு ‘சீல்‘ வைத்தனர். பின்னர் கடைசி வாக்காளரின் வரிசை எண்ணை 17-ஏ என்ற பதிவேட்டில் குறிப்பிட்டு, அதில் அனைத்து வாக்குச்சாவடி முகவர்களின் கையெழுத்துக்களையும் பெற்றனர். தொடர்ந்து பதிவான வாக்குகளின் விவரங்கள் அடங்கிய ‘17-சி‘ என்ற படிவத்தின் நகல் வாக்குச்சாவடிகளில் உள்ள வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் வாக்குச்சாவடிகளில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் ஜி.பி.ஆர்.எஸ். பொருத்தப்பட்ட வேனில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் இடமான மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்வி நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன்படி மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மயிலாடுதுறை மன்னம்பந்தலில் உள்ள ஏ.வி.சி. என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியிலும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மயிலாடுதுறை பாலிடெக்னிக் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
நேற்று மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சுரேஷ்குமார், ஏ.வி.சி. கல்லூரிக்கு நேரில் சென்று பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டார். பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை பூட்டி ‘சீல்‘ வைத்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடன் இருந்தனர். மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.