தி.மு.க. உதவியோடு ராகுல்காந்தி பிரதமராவார் செயல் வீரர்கள் கூட்டத்தில் ஐ.பெரியசாமி பேச்சு
தி.மு.க. உதவியோடு ராகுல்காந்தி பிரதமராவார் என செயல் வீரர்கள் கூட்டத்தில் ஐ.பெரியசாமி கூறினார்.
க.பரமத்தி,
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தி.மு.க சார்பில் க.பரமத்தியில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு க.பரமத்தி ஒன்றிய தி.மு.க. செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மணி அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ கே.சி.பழனிசாமி, மாநில நெசவாளர் அணிதலைவர் நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கழக துணைப்பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
நடந்து முடிந்த 18 சட்டசபை தொகுதியிலும், நடைபெற இருக்கும் 4 சட்டசபை தொகுதிகளிலும் ஆளும் கட்சிக்கு டெபாசிட் கிடைக்காது. கண்ணுக்கு எட்டாத தூரத்தில் எதிரிகளே இருக்கக்கூடாது. மோடியின் கதை நேற்றோடு முடிந்து விட்டது. 23–ந்தேதியோடு எடப்பாடியின் கதையும் முடிந்து விடும். 40 எம்.பி. தொகுதிகளை வென்று தி.மு.க. உதவியோடு ராகுல்காந்தி பிரதமர் ஆவார். 22 சட்டசபை தொகுதிகளை வென்று தளபதி தமிழ்நாட்டில் முதல்–அமைச்சர் ஆவார். எவ்வளவு பணம் கொடுத்தாலும், ஆளும் கட்சி வெற்றி பெறாது. மக்கள்தான் எஜமானார்கள். தமிழ்நாட்டில் ஊமை புரட்சி ஏற்பட்டுள்ளது. மே மாதம் 23–ந்தேதி தெரியும் அதன் தாக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி பேசுகையில், தளபதி எனக்கு மிகப்பெரிய பொறுப்பு கொடுத்துள்ளார். அதற்கு நன்றிக்கடனாக எம்.பி, எம்.எல்.ஏ. இரண்டையும் வென்று அவரிடம் உங்களின் ஆதரவோடு சமர்பிப்பேன். கரூரை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றுவேன். அரவக்குறிச்சியில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு 3 சென்ட் நிலம் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்வேன். கரூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது ரூ. ஆயிரம் கோடி நிதி பெற்று கரூர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தேன். அரவக்குறிச்சியில் வெற்றி பெற்றால் தன்னிறைவு தொகுதியாக மாற்றுவேன். மே மாதம் 23–ந்தேதி எடப்பாடி கவர்னரை சந்திப்பார். எதற்காக என்றால் ராஜினாமா கடிதம் கொடுக்க செல்வார்.என்றார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சின்னசாமி, கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, கழக நெசவாளர் அணி செயலாளர் பரணிமணி, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கரூர் ஒன்றிய செயலாளர் கந்தசாமி நன்றி கூறினார்.