புனித வெள்ளியையொட்டி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு
புனித வெள்ளியையொட்டி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் நேற்று காலை சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.;
தூத்துக்குடி,
புனித வெள்ளியையொட்டி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் நேற்று காலை சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.
புனித வெள்ளி
கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் பண்டிகையையொட்டி 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இதில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஏசு கிறிஸ்துவின் தலையில் முட்கிரீடம் அணிவித்து, சிலுவையை சுமக்க செய்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
இதனை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளியன்று ஏசு கிறிஸ்து பட்ட துயரங்களை விளக்கும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடத்தப்படுகிறது.
சிலுவைப்பாதை வழிபாடு
அதன்படி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் நேற்று காலை சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. இதில் சிலுவையை சுமந்தவாறு உள்ள ஏசுவின் உருவச்சிலையை கிறிஸ்தவ மக்கள் ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து சென்றனர். அப்போது கிறிஸ்தவ பாடல்களை பாடியவாறு சென்றனர். சிலுவை பாதை வழிபாட்டில் பங்குதந்தை லெரின் டிரோஸ் மற்றும் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். மக்களுக்கு மோர் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது.
மாலையில் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அப்போது மக்கள் சிலுவையில் முத்தமிட்டு வழிபாடு செய்து பசிப்பிணி காணிக்கை செலுத்தினர். அதன்பிறகு ஏசு உயிர்நீத்ததன் அடையாளமாக ஆலயங்கள் மூடப்பட்டன.
தியான ஆராதனை
தூத்துக்குடி கே.வி.கே.நகர் பெந்தேகொஸ்தே சபை பேராலயம் சார்பில் புனித வெள்ளியையொட்டி சிலுவைப்பாதை பவனி நடந்தது. பவனிக்கு பேராலய பிஷப் ஸ்டீபன் தலைமை தாங்கினார். போதகர் சாம் ஸ்டீபன் முன்னிலை வகித்தார். இந்த பவனி ஜெயராஜ் ரோடு, டூவிபுரம் 5-வது தெரு, கே.வி.கே.நகர் வழியாக ஆலயம் வந்தடைந்தது. அப்போது சிலுவைப்பாடல்களுடன் தியான வார்த்தைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து சிலுவை தியான ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை பேராலய பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.
இதேபோன்று தூத்துக்குடி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.
கயத்தாறு-கோவில்பட்டி
கயத்தாறு ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி பங்குதந்தை வில்சன் தலைமையில், துணை பங்குதந்தை சேவியர் முன்னிலையில் சிலுவைபாடு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் சிலுவைகளை சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர். அவர்கள் கயத்தாறு ஆஸ்பத்திரி சாலை, பழைய கடம்பூர் ரோடு வழியாக சென்று, அதே பகுதியில் உள்ள லூர்து மாதா ஆலயத்தை அடைந்தனர். அங்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் சிலுவை பாதை நிகழ்ச்சியும், திருச்சிலுவை ஆராதனையும் நடந்தது. பின்னர் ஜெரால்டு ரவி அடிகளார், திருச்சி ஏசு சபை அருள்தந்தை அருள்தாஸ், பெங்களூரு புனித சூசையப்பர் கல்லூரி துணை முதல்வர் பெளார்வின் அடிகளார், கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய பங்குதந்தை அலோசியஸ் துரைராஜ், உதவி பங்குதந்தை மைக்கேல் அடிகளார் ஆகியோர் இணைந்து வழிபாடு நடத்தினர். அதைத்தொடர்ந்து இரவு முழுவதும் சபை மக்கள் மவுன ஆராதனை நடத்தினர்.