பிளஸ்-2 தேர்வில் 94.23 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 94.23 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 94.23 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
பிளஸ்-2 தேர்வு
தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்டன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகேசன் மேற்பார்வையில், தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளிலேயே பதிவிறக்கம் செய்து, அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டன. நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்ததால், பல்வேறு பள்ளிக்கூடங்களை சேர்ந்த ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு சென்று விட்டு பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டது.
அதே நேரத்தில் தொடர்ச்சியான விடுமுறை காரணமாகவும், தங்களுக்கு செல்போனிலேயே எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகள் வந்து விடுவதாலும், பள்ளிக்கூடங்களுக்கு வந்து முடிவுகளை பார்க்கும் மாணவ-மாணவிகளின் ஆர்வம் குறைந்து காணப்பட்டது. மேலும் மதிப்பெண்கள் அடிப்படையில் முதலிடம் பிடித்த மாணவர்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படுவது இல்லை. இதனாலும் மாணவர்களிடையே தேர்வு முடிவுகள் குறித்த பரபரப்பு காணப்படவில்லை.
94.23 சதவீதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 498 மாணவர்கள், 11 ஆயிரத்து 739 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 237 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 8 ஆயிரத்து 668 மாணவர்கள், 11 ஆயிரத்து 343 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 11 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 94.23 சதவீதம் ஆகும்.
கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை விட 1.29 சதவீதம் தேர்ச்சி குறைந்து உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டம் மாநில அளவில் 7-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இந்த தேர்வில் மாணவர்கள் 91.26 சதவீதமும், மாணவிகள் 96.63 சதவீதமும் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.37 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.