பிளஸ்-2 பொதுத்தேர்வு: பெரம்பலூர் மாவட்டத்தில் 95.15 சதவீதம் பேர் தேர்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 95.15 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2019-04-19 22:30 GMT
பெரம்பலூர்,

தமிழகத்தில் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ- மாணவிகளுக்கான தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் மாணவர்களின் மன உளைச்சலை தடுக்கும் பொருட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ- மாணவிகளின் விவரம் வெளியிடப்படவில்லை.

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து நேற்று காலை முதலே பிளஸ்-2 தேர்வு முடிவு குறித்த விவரம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சரியாக காலை 9.30 மணியளவில் அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் தேர்வு முடிவு வெளியானதும், பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் பிளஸ்-2 தேர்வு முடிவு தகவல்கள் ஒட்டப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் 4 ஆயிரத்து 155 மாணவர்கள், 4 ஆயிரத்து 255 மாணவிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 410 பேர் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 904 மாணவர்களும், 4 ஆயிரத்து 98 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 2 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 95.15 சதவீதம் ஆகும். இந்த ஆண்டு முதல் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்துக்கும் 100 மதிப்பெண் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த மதிப்பெண்கள் 600 ஆகும். மேலும் கடந்த ஆண்டு வரை பிளஸ்- 2-க்கு தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு முதல் தாள், 2-ம் தாள் என தேர்வு நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு தேர்வு முறை மாற்றியமைக்கப்பட்டதால் முதல் தாள், 2-ம் தாள் என்று இல்லாமல் ஒரே தேர்வாக நடைபெற்றது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து புதிய முறை கொண்டு வரப்பட்டதால், அதன்படி இந்த ஆண்டும் மாணவ- மாணவிகள் அதிகம் பெற்ற மதிப்பெண்கள் விவரம் வெளியிடப்படவில்லை. மாணவ- மாணவிகளின் மதிப்பெண் விவரம் அனைத்தும் அந்தந்த பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும், அந்தந்த பள்ளிகளில் தேர்வு பட்டியல் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டன. இதேபோல் மாணவ- மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள், அவர்களின் பெற்றோர் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு அவர்களது பெற்றோரின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தேர்வு முடிவு வந்தது. இதில் அவர்களது பெயர், பாடவாரியாக அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள், தேர்ச்சி அல்லது தோல்வி என்ற விவரம் அனுப்பப்பட்டது. இதனால் மாணவ- மாணவிகள் தேர்வு முடிவுகளை தங்களது செல்போன் மூலம் அறிந்து கொண்டனர். இதனால் பலர் பள்ளிகளுக்கு நேரடியாக செல்லவில்லை. குறைந்த அளவிலான மாணவ- மாணவிகளே தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு வந்தனர். இதில் ஒரு சிலர் காலை 9.30 மணிக்கு முன்பாக பள்ளிகளுக்கு வந்து காத்து கொண்டிருந்தனர்.

பின்னர் அறிவிப்பு பலகைகளில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டவுடன், அதனை அவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு மதிப்பெண்கள் என்ன? என்பதை குறித்து கொண்டனர். அப்போது பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டோம் என்ற உற்சாகத்தில் மாணவர்கள் சிலர் துள்ளிக்குதித்து தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். பலர் வீடுகள் அல்லது இருந்த இடத்திலேயே இருந்து தங்களது செல்போன்கள் மூலம் இணையதள முகவரியில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்