நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு சி.சி.டி.வி. கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையத்தின் அறைகள் சி.சி.டி.வி. கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அங்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாகவும் கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.

Update: 2019-04-19 23:00 GMT
எலச்சிபாளையம்,

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர் மற்றும் திருச்செங்கோடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று முன்தினம் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

இந்த 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருச்செங்கோடு எளையாம்பாளையம், விவேகானந்தா பொறியியல் கல்லூரிக்கு இரவோடு இரவாக போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அங்குள்ள பாதுகாப்பு அறைகளில் அடுக்கி வைக்கப்பட்டன.

இந்த பாதுகாப்பு அறைகளை நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் வாணி மோகன், மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர்கள் மற்றும் நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அனைவரின் முன்னிலையிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு அறைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.

இது குறித்து கலெக்டர் ஆசியா மரியம் கூறியதாவது:-

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அனைத்து அறைகளிலும் சி.சி.டிவி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டு, கண் காணிக்கப்பட்டு வருகிறது. இந்த காட்சிகள் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும். இதை அரசியல் கட்சியினர் எப்போது வேண்டுமானாலும் சரிபார்த்து கொள்ளலாம்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைகளின் முன்பு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், அங்குள்ள வராண்டாவில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையினரும், தரைதளத்தில் மாவட்ட ஆயுதப்படை காவலர்களும், வெளியில் மாவட்ட போலீசாரும் என 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களிடம் வாக்குப்பதிவு குறித்து விவாதிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு தேவையில்லை என அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்