கார் மீது அரசு பஸ் மோதல்: 10-ம் வகுப்பு மாணவி பலி 3 பேர் காயம்

கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார். மாணவியின் தாய் உள்பட மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-04-19 23:15 GMT
பூந்தமல்லி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பிரித்வி நகர், 1-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ரவி(வயது 45). முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி ஸ்ரீதேவி. இவர்களுடைய மகள் ரேஷ்மா சாய்(15). இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தார்.

நேற்று முன்தினம் சென்னை வானகரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக ரவி தனது காரில் மனைவி ஸ்ரீதேவி, மகள் ரேஷ்மா சாய் மற்றும் உறவினர்கள் பூபதி, ரமாதேவி ஆகியோருடன் சென்னை வந்தார். காரை ரவியே ஓட்டினார்.

தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்றபோது, எந்த பகுதியில் மேம்பாலத்தில் இருந்து இறங்குவது என தெரியாமல் தாம்பரம் சென்று விட்டார். அங்கிருந்து பைபாசில் திரும்பி வந்தபோது மீண்டும் கீழே இறங்கும் சாலை தெரியாமல் மதுரவாயல் மேம்பாலத்தின் மீது வானகரம் அருகே காரை நிறுத்தி விட்டு, பின்னோக்கி எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவர்களுக்கு பின்னால் கள்ளக்குறிச்சியில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த அரசு பஸ், எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில் காரின் ஒரு பகுதி சேதமடைந்தது. ரவியை தவிர காரில் இருந்த மற்ற 4 பேரும் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி ரேஷ்மாசாய் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் காயம் அடைந்த ஸ்ரீதேவி, ரமாதேவி, பூபதி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கு காரணமான அரசு பஸ் டிரைவர் ஜேம்ஸ்(44) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்