காசிமேடு அருகே கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவர் பலி

காசிமேடு அருகே கடலில் நண்பர்களுடன் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவர் பலியானார்.

Update: 2019-04-19 22:30 GMT
திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு கடற்கரை சாலை குடிசைமாற்றுவாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவருடைய மகன் கோகுல்(வயது 15). இவர், அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார்.

கோகுல், அதே பகுதியை சேர்ந்த தனது பள்ளிக்கூட நண்பர்களான விக்கி (14), கார்த்திக் (13) ஆகியோருடன் நேற்று முன்தினம் காசிமேடு பகுதியில் கடலில் குளிக்கச்சென்றார். நண்பர்கள் 3 பேரும் கடலில் குளித்து விளையாடினர்.

அப்போது ராட்சத அலை ஒன்று மாணவர்கள் 3 பேரையும் கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதில் விக்கி, கார்த்திக் இருவரும் நீந்தி கரையேறிவிட்டனர். ஆனால் மாணவன் கோகுலை மட்டும் ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச்சென்று விட்டது.

உயிர் தப்பிய விக்கி, கார்த்திக் இருவரும் கோகுலை காப்பாற்றும்படி அப்பகுதி மீனவர்களிடம் கூறினார்கள். உடனடியாக மீனவர்கள் கடலுக்குள் சென்று நீண்ட நேரமாக தேடியும் கோகுலை கண்டுபிடிக்க முடியவில்லை. கோகுல் கடலில் மூழ்கி பலியானார்.

இந்த நிலையில் நேற்று காலை அண்ணாநகர் பகுதியில் மாணவர் கோகுல் உடல் கரை ஒதுங்கியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் விரைந்து சென்று மாணவர் கோகுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்