சேலத்தில் பரபரப்பு சம்பவம்: ஒரே நாளில் 50 பேரை கடித்து குதறிய வெறிநாய் பொதுமக்கள் அடித்து கொன்றனர்

சேலத்தில் ஒரேநாளில் 50 பேரை கடித்து குதறிய வெறிநாயை பொதுமக்கள் அடித்து கொன்றனர்.

Update: 2019-04-19 22:30 GMT

சேலம், 

இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

சேலம் கிச்சிப்பாளையம் அருகே களரம்பட்டி கடைவீதியில் நேற்று காலை 7.45 மணியளவில் அந்த பகுதி பொதுமக்கள் சிலர் டீக்குடிப்பதற்காக வந்தனர். மேலும் பலர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு வந்து கொண்டிருந்தனர். சிலர் நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதிக்கு கருப்பு நிற வெறிநாய் ஓடி வந்தது. அந்த நாய் திடீரென அங்கு நின்றவர்கள், நடந்து சென்றவர்கள் என பலரை கடித்து குதறியது. இதில் அவர்களுக்கு கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் பீறிட்டு வந்ததால் அவர்கள் “அய்யோ, அம்மா“ என்று சத்தம் போட்டனர். ஆனால் அந்த வெறி நாய் தொடர்ந்து மற்றவர்களையும் கடித்தது.

பின்னர் அங்கிருந்து ஓடி அருகில் உள்ள நாராயணன் நகர் பகுதிக்கு சென்றது. அப்போது அங்கிருந்த சிலரையும் கடித்தது. இதில் அவர்களுக்கும் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அதோடு நிற்காமல் காந்திமகான் தெருவுக்கு ஓடிச்சென்று சிலரை கடித்தது. தொடர்ந்து பச்சப்பட்டி பகுதிக்கு ஓடிச்சென்று அங்கிருந்த சிலரை கடித்து குதறி விட்டு ஓடியது.

இப்படியாக நாயின் அட்டகாசம் தொடர்ந்ததால் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு அந்த பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் வெறிநாயை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களால் பிடிக்க முடியவில்லை. வெறிநாயை பிடிக்க முயன்ற மாநகராட்சி ஊழியர்கள் 2 பேரையும் அது கடித்தது.

ஒரேநாளில் வெறி நாய் கடித்ததில் ஆண், பெண், முதியோர் என சுமார் 50 பேர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து காயம் அடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர். அப்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெறிநாய் கடிக்கு போதிய மருந்து இருப்பு இல்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அவதிப்பட்டனர். வலி தாங்க முடியாமல் காயம்பட்டவர்கள் துடித்தனர். பின்னர் டாக்டர்கள், மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் திருமால்பாபுவிடம் கேட்டபோது, வெறி நாய் கடித்து சுமார் 50 பேர் நேற்று சிகிச்சைக்கு வந்தனர். அவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. 48 பேர் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்று விட்டனர். 2 பேர் மட்டும் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர், என்று கூறினார்.

இதுபற்றி காயம் அடைந்தவர்கள் கூறும்போது காய்கறிகள் வாங்குவதற்காக காலையில் வீதிக்கு வந்து கொண்டிருந்தோம். அப்போது கருப்பு நிறத்தில் ஒரு நாய் ஓடி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் ஒவ்வொருவராக கடிக்கத்தொடங்கியது. சிறிது நேரத்தில் பலரை கடித்து விட்டு அங்கிருந்து ஒடி விட்டது. அதை யாராலும் பிடிக்க முடியவில்லை.

அந்த நாய், மற்ற நாய்கள் போன்று இல்லை. வித்தியாசமாக இருந்தது. நாய் கடித்ததில் பலருக்கு சதை பிய்ந்து விட்டது. இந்த நாய், குழந்தைகளை கடித்தால் உயிர்பிழைப்பது கடினம். எனவே எங்களை கடித்து விட்டு தப்பிச்சென்ற வெறி நாயை உடனே பிடிக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் 50 பேரை கடித்து விட்டு ஓடிய வெறிநாய் பட்டைக்கோவில் பகுதியில் நிற்பது தெரிந்தது. இதையடுத்து பொதுமக்கள் சிலர் அந்த நாயை துரத்தி சென்று அடித்து கொன்றனர்.

சேலம் மாநகராட்சி பகுதி முழுவதும் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெளியில் செல்வதற்கே பயப்படுகின்றனர். எனவே தெருநாய் அட்டகாசத்தை தடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்