கே.எச்.முனியப்பா உறவினர் வீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சம் பறிமுதல் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த முன்னாள் கவுன்சிலர் கைது

கோலார், சிக்பள்ளாப்பூர் நாடாளுமன்ற தொகுதிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.

Update: 2019-04-18 22:00 GMT
கோலார் தங்கவயல்,

கோலார், சிக்பள்ளாப்பூர் நாடாளுமன்ற தொகுதிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. இதற்கிடையே காங்கிரஸ் வேட்பாளர் கே.எச்.முனியப்பாவின் உறவினர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் சிக்பள்ளாப்பூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.

வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது

கோலார் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களிலேயே கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா தொட்டசிவாரா, தொட்ட கடத்தூரு, தம்பிஹள்ளி ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்தன.

இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் சுமார் 30 நிமிடங்கள் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்தப்பட்டு வாக்குப் பதிவு நடந்தது.

கோலார் தங்கவயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்வமின்றி வாக்களித்தனர். இதனால் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக ராபர்ட்சன்பேட்டை பகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி கிடந்தன.

பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

இதற்கிடையே நேற்று காலை 10 மணியளவில் ராபர்ட்சன்பேட்டை விவேக் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி அருகில் நகரசபை முன்னாள் கவுன்சிலர் புண்ணியமூர்த்தி தனது ஸ்கூட்டரில் வந்தார். அப்போது அவரையும், அவருடைய ஸ்கூட்டரையும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த ஸ்கூட்டரில் இருந்து காங்கிரஸ் கட்சி கொடிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் இருந்தன.

மேலும் ரூ.86 ஆயிரத்து 100 ரொக்கமும் இருந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் புண்ணியமூர்த்தியிடம் இல்லை. இதனால் அவரிடமிருந்த ரூ.86 ஆயிரத்து 100-ம் பறிமுதல் செய்தனர். மேலும் ஸ்கூட்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபற்றி ராபர்ட்சன்பேட்டை போலீசார், புண்ணியமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ரூ.10 லட்சம் பறிமுதல்

இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் கோலார் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான மஞ்சுநாத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அவர், அதிகாரிகளுடன் கோலார் டவுன் வீர ஆஞ்சநேயா நகரில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் கே.எச்.முனியப்பாவின் உறவினர் குமாரின் வீட்டில் சோதனை மேற்கொண்டார். அப்போது குமாரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் எதுவும் குமாரிடம் இல்லை.

இதனால் ரூ.10 லட்சத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கோலார் டவுன் போலீசார், குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முன்னாள் கவுன்சிலர் கைது

இதேபோல சிக்பள்ளாப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் வாக்குப்பதிவு நடந்தது. சிக்பள்ளாப்பூர் நகரசபை முன்னாள் கவுன்சிலர் மஞ்சுநாத் ஆசாரி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பறக்கும் படையினரால் கைது செய்யப்பட்டார். வேறு எந்தவித அசம்பாவிதமும் சிக்பள்ளாப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெறவில்லை.

மேலும் செய்திகள்