கர்நாடகத்தில் பிரதமர் மோடியின் செல்வாக்கு குறைந்துவிட்டதை காட்டுகிறது வாக்களித்த பின்பு முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி
மண்டியா தொகுதிக்கு ஊடகத்தினர் அதிக முக்கியத்துவம் கொடுத்தது கர்நாடகத்தில் பிரதமர் மோடியின் செல்வாக்கு குறைந்து விட்டதை காட்டுகிறது என்று ஓட்டுபோட்ட பின்பு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
பெங்களூரு,
மண்டியா தொகுதிக்கு ஊடகத்தினர் அதிக முக்கியத்துவம் கொடுத்தது கர்நாடகத்தில் பிரதமர் மோடியின் செல்வாக்கு குறைந்து விட்டதை காட்டுகிறது என்று ஓட்டுபோட்ட பின்பு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
குமாரசாமி ஓட்டுப்போட்டார்
கர்நாடகத்தில் உள்ள பெங்களூரு, மண்டியா உள்பட 14 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று முதல்கட்டமாக தேர்தல் நடந்தது. ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா பிடதி அருகே சேத்தகானஹள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு முதல்-மந்திரி குமாரசாமி, அவரது மனைவி அனிதா, மகன் நிகில் ஆகியோர் நேற்று காலை 7.45 மணிக்கு வந்தனர். அங்கு அவர்கள் 3 பேரும் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.
வாக்களித்த பின்னர் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது(குமாரசாமி), எனது மனைவி அனிதா மற்றும் மகன் நிகில் ஆகிய 3 பேரின் பெயரும் சேத்தகானஹள்ளி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இடம் பெற்று உள்ளது. அதனால் இங்கு வந்து ஓட்டுபோட்டு 3 பேரும் ஜனநாயக கடமை ஆற்றி உள்ளோம்.
செல்வாக்கு குறைந்து விட்டது
எனது மகன் நிகில் போட்டியிடும் மண்டியா தொகுதியை ஊடகத்தினர் மிகவும் பிரபலமான தொகுதியாக மாற்றி விட்டனர். தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகத்தினர் தற்போது மண்டியா தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.
இது கர்நாடகத்தில் பிரதமர் மோடியின் செல்வாக்கு குறைந்து விட்டது என்பதை காட்டுகிறது. மண்டியா தொகுதிக்கு ஊடகத்தினர் கொடுத்த முக்கியத்துவம் எங்களுக்கு அதிக லாபத்தை பெற்று தரும் என்று நினைக்கிறேன்.
மண்டியாவில் கூட்டணி வேட்பாளரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் சுமலதா போட்டியிட்டு உள்ளார். இதுவும் எங்களுக்கு ஒரு விதத்தில் நல்லது தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் அங்கிருந்து மனைவி, மகனுடன் புறப்பட்டு சென்று விட்டார்.