மின்மயானம் பிரச்சினை: வெங்கிட்டாபுரம் வாக்குச்சாவடியில் 103 வாக்குகள் மட்டும் பதிவு அதிகாரிகள் சமரசம் செய்தும் ஓட்டுப்போட மறுத்த பொதுமக்கள்

பல்லடம் அருகே மின் மயானம் அமைக்கும் பிரச்சினை தொடர்பாக வெங்கிட்டாபுரம் வாக்குச்சாவடியில் மொத்தம் 103 வாக்குகள் மட்டுமே பதிவானது. அதிகாரிகள் சமரசம் செய்தும் அந்த பகுதி வாக்காளர்கள் வாக்களிக்க செல்ல மறுத்து விட்டனர்.

Update: 2019-04-18 21:30 GMT
பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வெங்கிட்டாபுரம் உள்ளது. இந்த பகுதியில் மின்மயானம் அமைக்கும் பணி தொடங்கி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கு மின்மயானம் அமைக்கும் பணிக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் மின்மயான பணியை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்றும், இதற்காக நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் ஏற்கனவே அந்த பகுதி மக்கள் அறிவித்து இருந்தனர்.

வெங்கிட்டாபுரம் பகுதி கோவை நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகிறது. இதையடுத்து வெங்கிட்டா புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த வாக்குச்சாவடிக்கு பணிக்கு வந்த ஊழியர்கள் நேற்று காலை 7 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தயார் நிலையில் வைத்து இருந்தனர். மேலும் வாக்களிக்க வாக்காளர்கள் வருவார்கள் என எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் நேரம் சென்றதே தவிர வாக்காளர்கள் யாரும் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரவில்லை. இதனால் நேரம் காலை 8 மணியை கடந்து 9 மணியானது. அப்போதும் யாரும் வரவில்லை. இதனால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.

அப்போதுதான் மின்மயான பிரச்சினை தொடர்பாக வாக்காளர்கள் யாரும், வாக்களிக்க வரவில்லை என தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், தாசில்தார் சாந்தி, மண்டல துணை தாசில்தார் சந்திரசேகர், துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி ஆகியோர் வெங்கிட்டாபுரம் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்.நகர் பகுதிக்கு சென்று அந்த பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வெங்கிட்டாபுரம் வாக்குச்சாவடியில் ஆண் வாக்காளர்கள் 539 பேர், பெண் வாக்காளர்கள் 551 பேர் மற்றும் திருநங்கை ஒருவர் என மொத்தம் 1091 வாக்காளர்கள் உள்ளனர்.

அப்போது அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது “எங்கள் பகுதியில் மின்மயானம் அமைக்க கூடாது. ஏற்கனவே உள்ள மயானத்திற்கு வழி ஏற்படுத்தி தரவேண்டும். சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் வாங்க 3 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே ரேஷன் கடை கட்டி தர வேண்டும் இதுபோன்ற அடிப்படை வசதிகள் செய்துகொடுத்தால் வாக்களிக்க போவதாக தெரிவித்தனர்.

அதன்பின்னர் வெங்கிட்டாபுரம் பகுதிக்கு அதிகாரிகள் சென்று அந்த பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அந்தபகுதி பொதுமக்கள் கூறும்போது “ எங்கள் பகுதியில் உள்ள குட்டையை ஆக்கிரமித்து விட்டனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். வெங்கிட்டாபுரத்தில் மின் மயானம் கட்டக்கூடாது என எழுத்துப்பூர்வமாக எழுதி தர வேண்டும் என்றனர். ஆனால் அதிகாரிகள் எழுத்து பூர்வமாக எழுதி கொடுக்க முடியாதுஎன்று கூறிவிட்டனர். இதற்கிடையில் அந்த வாக்குச்சாவடியில் பணியில் இருந்த 2 ஊழியர்கள் உள்பட 46 வாக்குகள் மட்டுமே பகல் 11.45 மணிவரை பதிவானதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் வடுகபாளையம், நாசுவம்பாளையம் மற்றும் நாசுவம்பாளையம் அரிஜன காலனி பகுதி பொதுமக்கள் வெங்கிட்டாபுரம் வாக்குச்சாவடியில் இருந்து சற்று தொலைவில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது நாங்கள் எங்கள் பகுதியில்தான் அமர்ந்து இருக்கிறோம் என்றனர். அதற்கு போலீசார் வாக்குப்பதிவு நேரத்தில் சாலையில் அமரக்கூடாது என்று எச்சரிக்கை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிவரை இந்த வாக்குச்சாவடியில் ஆண்கள் 51 பேரும், பெண்கள் 52 பேரும் என மொத்தம் 103 பேர் மட்டும் வாக்களித்து இருந்தனர்.

வெங்கிட்டாபுரத்தில் மின்மயானம் அமைக்க அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மின்மயான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பல்லடம் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்