பவானி அருகே ஜவுளி பை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
பவானி அருகே ஜவுளி பை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
பவானி,
ஈரோடு மாவட்டம் பவானி அருகே சொக்காரம்மன் நகரை சேர்ந்தவர் செல்வம். இவர் அந்த பகுதியில் உள்ள கட்டிடத்தின் முதல் தளத்தில் ஜவுளி பையான அஸ்தர் பை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு சுமார் 1000 பேர் ஷிப்டு முறையில் வேலை பார்த்து வருகின்றார்கள். நேற்று நாடாளுமன்ற தேர்தலையொட்டி தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் தொழிற்சாலை பூட்டப்பட்டு கிடந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் அந்த தொழிற்சாலை அருகே உள்ள மைதானத்தில் சிலர் விளையாடி கொண்டிருந்தார்கள். அப்போது மின் ஒயர் கருகும் வாசம் வந்தது. சிறிது நேரத்தில் தொழிற்சாலையில் இருந்து புகை மூட்டமாக வந்து கொண்டிருந்தது. உடனே இதுபற்றி பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அணைக்க முடியவில்லை. மளமளவென பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதைத்தொடர்ந்து அந்தியூர் தீயணைப்பு வீரர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அந்தியூர், பவானி தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த அஸ்தர் பை, பிளாஸ்டிக் கைப்பிடி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. இதன் சேத மதிப்பு லட்சக்கணக்கான மதிப்பில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தீ விபத்து பற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். மின்கசிவே இந்த தீ விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.