நெல்லை, தென்காசி தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைத்து கொண்டு செல்லப்பட்டன ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு
நெல்லை, தென்காசி தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைத்து பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்து செல்லப்பட்டன.
நெல்லை,
நெல்லை, தென்காசி தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைத்து பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்து செல்லப்பட்டன.
ஓட்டுப்பதிவு
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றது. நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதற்காக 1,796 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. ஒரு சில பகுதிகளில் இரவு வரை வாக்குப்பதிவு நடந்தது.
ஓட்டுப்பதிவு நேரம் முடிவடைந்த பிறகு வாக்குப்பதிவு அலுவலர்கள், கட்டுப்பாட்டு எந்திரம், 2 வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு வி.வி.பாட் எனப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் எந்திரம் ஆகியவற்றை அதற்குரிய பெட்டிகளில் வைத்து ‘சீல்’ வைத்தனர். வேட்பாளர்களின் முகவர்களும் தங்களது ‘சீல்’ வைத்து பதிவு செய்தனர்.
இதன் பிறகு அந்தந்த மண்டல அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன், வரிசையாக வாக்குச்சாவடிகளுக்கு சென்றனர். ஒவ்வொரு மண்டல அதிகாரிக்கும் 10 அல்லது 11 வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன. அவர்கள் வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் உள்ளிட்ட விவரங்கள் சரியாக பதிவு செய்யப்பட்டு உள்ளதா? என்பது உறுதி செய்து பெட்டிகளை லாரி மற்றும் வேனில் ஏற்றினர்.
பின்னர் அவற்றை ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு தயார் நிலையில் இருந்த அதிகாரிகள் வரிசையாக ஓட்டுப்பதிவு எந்திரங்களை சரி பார்த்து பெற்று, உரிய இடத்தில் வைத்தனர். நள்ளிரவுக்கு பிறகு வாக்கு எண்ணும் மையத்துக்கு ஒவ்வொரு வாகனமாக வந்து கொண்டிருந்தது.
இதே போல் தென்காசி (தனி) தொகுதி ஓட்டு எண்ணும் மையம் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதியில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் சேகரிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் குற்றாலத்துக்கு கொண்டு வரப்பட்டது.
3 அடுக்கு பாதுகாப்பு
இந்த 2 தொகுதிகளில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் தலா 6 அறைகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன. அதாவது ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் தலா 6 சட்டசபை தொகுதிகள் உள்ளடக்கி இருக்கின்றன. எனவே ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சட்டசபை தொகுதி வாரியாக 6 அறைகளில் வரிசை எண் படி வைக்கப்பட்டு உள்ளன.
இந்த அறைக்கு வெளியே 24 மணி நேரமும் நிற்கும் வகையில் சுழற்சி முறையில் துணை ராணுவ படை மற்றும் போலீசார் ஆயுதம் ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதைத்தொடர்ந்து கட்டிடத்தின் உள் வட்ட பகுதியில் போலீசார் சுற்றி வரும் வகையில் 2-வது அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்படுகிறது. 3-வதாக கட்டிடத்தின் வெளியே இருந்து யாரும் உள்ளே நுழைய முடியாத வகையில், நுழைவு வாசல் மற்றும் கட்டிடத்தின் சுற்றுப்பகுதியில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்படுகிறது.
இதுதவிர கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன. அதாவது மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள 6 அறைகளிலும் தலா 3 கேமராக்கள் வீதம் 18 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் அந்த அறைகளை சுற்றி 8 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சியை நேரடியாக பார்க்கும் வகையில் ஓட்டு எண்ணும் மையத்திலேயே ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அகன்ற திரை டி.வி.க்கள் பொருத்தப்பட்டு கேமரா காட்சிகள் ஒளிபரப்பாகிறது. அந்த அறையில் வேட்பாளரின் முகவர்களும் அமர்ந்து கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.