தர்மபுரி மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது வாக்காளர்கள் அவதி
தர்மபுரி மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்டது. இதனால் வாக்காளர்கள் அவதிப்பட்டனர்.;
காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் -பாலக்கோடு சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக 3 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் எண்-140, எண்-141 ஆகிய 2 மையங்களில் நேற்று காலை 7 மணி முதலே ஆண்களும், பெண்களும் வாக்களிக்க ஆர்வத்துடன் வரிசையில் நின்றிருந்தனர்.
அப்போது வாக்குப்பதிவு அலுவலர் இந்த 2 வாக்குப்பதிவு மையங்களில் வைக்கப்பட்டிருந்த எந்திரங்களை ஏஜெண்டுகள் முன்னிலையில் பரிசோதனை நடத்த எந்திரத்தை இயக்கினார். ஆனால் எந்திரத்தில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக அது இயங்கவில்லை. இதனால் தேர்தல் அலுவலருக்கும், ஏஜெண்டுகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எந்திரத்தில் கோளாறு உள்ளதை அறிந்ததும் வாக்காளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
இதனால் மைய வளாகத்தில் பரபரப்பு ஏற்படவே தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தார்.இதையடுத்து தேர்தல் மையத்திற்கு விரைந்து வந்த ஊழியர்கள் மாற்று எந்திரம் மூலம் பரிசோதனை வாக்குப்பதிவு நடத்தினார்கள். ஆனால் அந்த எந்திரமும் பழுதுபட்ட நிலையில் இருந்ததால் மற்றொரு எந்திரம் மூலம் பரிசோதனை வாக்குப்பதிவு நடத்தி முடித்து முறையான வாக்குப்பதிவை தொடங்கினார்கள். இதனால் சுமார் 1 மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. எனவே வாக்களிக்க வந்த வாக்காளர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
இதேபோல் பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி ஒன்றிலும் எந்திர கோளாறு காரணமாக சுமார் 30 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் வாக்காளர்கள் அவதிப்பட்டனர்.
மொரப்பூர் அருகே வகுரப்பம்பட்டி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்தது. தொழில்நுட்ப நிபுணர்கள் வந்து வாக்குப்பதிவு எந்திரத்தை சீரமைத்தனர். இதனால் வாக்குப்பதிவு சிறிது நேரம் தடைபட்டது.
இதேபோல் தர்மபுரி வெண்ணாம்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வாக்குச்சாவடி மையத்திலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் திடீர் பழுது ஏற்பட்டது. தொழில்நுட்ப நிபுணர்கள் சீரமைத்த பின்னர் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கி நடந்தது. இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.