61 வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பழுது பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்தனர்

தூத்துக்குடி தொகுதியில் 61 வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்களில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்தனர்.;

Update:2019-04-19 03:30 IST
தூத்துக்குடி, 

தூத்துக்குடி தொகுதியில் 61 வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்களில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்தனர்.

ஓட்டுப்பதிவு

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நேற்று காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. தொடர்ந்து 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

தூத்துக்குடியில் காலை முதல் வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதே நேரத்தில் மாவட்டத்தின் பிற இடங்களில் மிதமான வாக்குப்பதிவு நடந்தது.

திடீர் பழுது

தூத்துக்குடி டூவிபுரம், ஹோலிகிராஸ் தொடக்கப்பள்ளி, போல்பேட்டை தங்கம் நடுநிலைப்பள்ளி, அத்திமரப்பட்டி, கழுகுமலை கே.வேலாயுதபுரம், குளத்தூர், ஆழ்வார்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த 61 வாக்குச்சாவடி மையங்களில் இருந்த ஓட்டுப்பதிவு எந்திரங்களில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பழுதை சரி செய்தபின் வாக்களித்தனர்.

ஆழ்வார்தோப்பு வாக்குச்சாவடியில் அ.ம.மு.க. வேட்பாளர் புவனேசுவரன் வாக்குப்பதிவு செய்வதற்காக சென்றார். அப்போது எந்திரம் பழுதடைந்ததால் நீண்ட நேரம் காத்திருந்தார். உடனடியாக மண்டல அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும், பெல் நிறுவன என்ஜினீயர்களும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு விரைந்து சென்று வாக்குப்பதிவு எந்திரத்தை சரி செய்தனர். பழுது உடனடியாக சரி செய்ய முடியாத எந்திரங்கள் மாற்றப்பட்டன. 10 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டுப்பதிவு நடந்து கொண்டு இருந்தபோது பழுதடைந்தது. அந்த வாக்குச்சாவடிகளில் புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்தப்பட்டன. 3 வாக்குச்சாவடிகளில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்தது.

மெஞ்ஞானபுரம்

மெஞ்ஞானபுரம் அருகே கீழ ராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனால் அங்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவில்லை. தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள், என்ஜினீயர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை பழுது நீக்க முயன்றனர். ஆனாலும் அதனை பழுதுநீக்க முடியவில்லை. இதையடுத்து திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து மாற்று வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டது. சுமார் 3½ மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.

மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி அளவில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்தது. அதனை தேர்தல் அலுவலர்கள் சரி செய்தனர். தொடர்ந்து காலை 10 மணியில் இருந்து வாக்குப்பதிவு மீண்டும் நடந்தது.

கோவில்பட்டி

கோவில்பட்டி லாயல் மில் காலனி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனால் அங்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவில்லை. இதையடுத்து தேர்தல் அலுவலர்கள், என்ஜினீயர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை பழுது நீக்கினர். தொடர்ந்து காலை 9 மணி அளவில் வாக்குப்பதிவு எந்திரம் சரி செய்யப்பட்டு, வாக்குப்பதிவு தொடங்கியது.

கோவில்பட்டி வேலாயுதபுரம் ஈ.வெ.அ.வள்ளிமுத்து தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்ததால் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவில்லை. தொடர்ந்து அதனை அதிகாரிகள் சரி செய்த பின்னர் காலை 8 மணிக்கு அங்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, கோவில்பட்டி உதவி கலெக்டர் அமுதா, தேர்தல் பார்வையாளர் சுகி ஷியாம் பெய்க் மற்றும் அதிகாரிகள் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டனர்.

சாத்தான்குளம்

சாத்தான்குளம் நகர பஞ்சாயத்து அலுவலக வாக்குச்சாவடி, 3-வது வார்டு டி.டி.டி.ஏ. ஸ்டீபன் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி, தாமரைமொழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததால், அதனை அதிகாரிகள் சரிசெய்தனர். இதனால் அங்கு சுமார் ¾ மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

பேய்க்குளம் பெருமாள்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் காலை 8.30 மணி அளவில் வாக்களிக்க சென்ற மூதாட்டி, வாக்குப்பதிவு எந்திரத்தில் நீண்ட நேரமாக பட்டனை அழுத்தியதால் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்தது. இதையடுத்து தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை சரிசெய்து, காலை 9 மணி அளவில் மீண்டும் வாக்குப்பதிவை தொடங்கினர்.

கலெக்டர் பேட்டி

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,595 வாக்குச்சாவடிகளில் காலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. தொடர்ந்து 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்டது. அந்த பழுது நீக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் எந்திரங்கள் மாற்றப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் 2 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைத்து உள்ளோம். பெல் நிறுவன என்ஜினீயர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு பழுதடைந்த எந்திரங்கள் மாற்றப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்