எதிர்காலத்தை வளமானதாக்க ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ நமச்சிவாயம் வேண்டுகோள்
எதிர்காலத்தை வளமானதாக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று நமச்சிவாயம் கூறியுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுதந்திரம் பெற்ற 72 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டு, வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற பெருமை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. அந்த வகையில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மகத்தான சாதனைகளை புரிந்தது. அத்தகைய சாதனைகளை நிகழ்த்திய காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குங்கள் என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்கிற வகையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது. மீண்டும் நிறைவேற்ற வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.
எனவே, ஜனநாயகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தி வருகிறார். ஜனநாயகத் தூண்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டுள்ளன. ஜனநாயக உணர்வே இல்லாமல் செயல்படுகிற நரேந்திர மோடி ஆட்சியை அகற்றி, மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டிய பொறுப்பு வாக்காளர்களுக்கு இருக்கிறது. அதை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எதிர்கால பிரதமராக பொறுப்பேற்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்திருக்கிறார்.
மத்தியில் நடைபெற்று வருகிற மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதற்கு முடிவு செய்யப்பட வேண்டிய நாள் ஏப்ரல் 18 (இன்று). புதுவை வாக்காளப் பெருமக்களே, மாநில உரிமையை தொடர்ந்து காத்திடவும் உங்களது எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக் கொள்வதற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடுகிற வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என புதுச்சேரி காங்கிரஸ் சார்பாக அன்போடு வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.