110 வயதில் ஓட்டுப்போட தயாராக இருக்கும் மூதாட்டி ‘உயிர் உள்ளவரை வாக்களிக்காமல் மட்டும் இருக்கமாட்டேன்’ என்கிறார்

நாடாளுமன்ற தேர்தலில் ஹாவேரி தொகுதியில் 110 வயதில் ஓட்டுப்போட மூதாட்டி தயாராக இருக்கிறார். தனது உயிர் உள்ளவரை வாக்களிக்காமல் மட்டும் இருக்க மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-04-17 22:30 GMT
பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தலில் ஹாவேரி தொகுதியில் 110 வயதில் ஓட்டுப்போட மூதாட்டி தயாராக இருக்கிறார். தனது உயிர் உள்ளவரை வாக்களிக்காமல் மட்டும் இருக்க மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

110 வயது மூதாட்டி

கர்நாடகத்தில் இருகட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் இன்றும் (வியாழக்கிழமை), 2-வது கட்ட தேர்தல் 23-ந் தேதியும் நடைபெறுகிறது. 2-வது கட்டமாக நடைபெறும் தேர்தலில் கதக் மாவட்டத்தை சேர்ந்த 110 வயது மூதாட்டி ஓட்டுப்போடுவதற்கு தயாராகி வருகிறார். கதக் மாவட்டம் ஹாவேரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டு உள்ளது. இதனால் ஹாவேரி தொகுதியில் அந்த மூதாட்டி வாக்களிக்க உள்ளார். அதாவது, கதக் மாவட்டம் ரோன் தாலுகா அகாரி கிராமத்தை சேர்ந்த நாகம்மா பசலிங்கய்யா பண்டாரி என்ற மூதாட்டி தான் அவர்.

கடந்த 1952-ம் ஆண்டு நமது நாட்டில் நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில் நாகம்மா ஓட்டு போட்டு இருந்தார். அந்த தேர்தலில் இருந்து கடந்த ஆண்டு(2018) நடந்த சட்டசபை தேர்தல் வரை நாகம்மா ஓட்டுப்போட்டுள்ளார். இதுவரை நடந்த அனைத்து நாடாளுமன்ற தேர்தல், கர்நாடக சட்டசபை தேர்தலில் நாகம்மா ஓட்டுப்போட்டு தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப்போட்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நாகம்மா திகழ்ந்து வருகிறார்.

வாக்களிக்காமல் இருக்கமாட்டேன்

இதுகுறித்து நாகம்மா கூறியதாவது:-

1952-ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கும், தற்போது நடக்கும் தேர்தலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. முதல் முறையாக நடந்த தேர்தலில் தேசபக்தி, விழிப்புணர்வு, ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு இருந்தது. தற்போது நடந்து வரும் தேர்தல்கள் சாதி, பணத்தின் அடிப்படையில் நடக்கிறது. தந்தைக்கு எதிராக மகன், அண்ணனுக்கு எதிராக தம்பி என ேதர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தல் முடிந்ததும் அவர்கள் ஒன்று சேர்ந்து விடுகின்றனர். ஒவ்வொரு கட்சிகளின் தொண்டர்களும், வாக்காளர்களும் தேர்தல் முடிந்த பின்பும் ஏதோ விரோதத்துடன் இருக்கின்றனர்.

இதற்கு முன்பு ஊருக்கு ஒரு வாக்குச்சாவடி தான் இருக்கும். வாக்குச்சாவடியை கண்டுபிடித்து ஓட்டுப்போடுவதே பெரிய விஷயமாக இருந்தது. தற்போது அந்த நிலை மாறி விட்டது. இதுவரை நான் தவறாமல் ஓட்டுப்போட்டு வந்துள்ளேன். எனது உடல் நிலை சரியில்லாததால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. ஆனாலும் நடைபெற உள்ள தேர்தலில் நான் ஓட்டுப்போட தயாராக இருக்கிறேன். என் உயிர் உள்ளவரை வாக்களிக்காமல் மட்டும் இருக்க மாட்டேன்.

இவ்வாறு நாகம்மா கூறினார்.

மேலும் செய்திகள்