வர்த்தகர்களுக்கு உதவும் ‘டாடா ஏஸ் கோல்டு’
டாடா நிறுவனத்தின் குட்டி யானை என்றழைக்கப்படும் ‘ஏஸ்’ மாடல் வாகனம் மிகவும் பிரபலம்.
வர்த்தக வாகனங்களில் டாடா நிறுவனத்தின் குட்டி யானை என்றழைக்கப்படும் ‘ஏஸ்’ மாடல் வாகனம் மிகவும் பிரபலம். வர்த்தக பயன்பாடு மற்றும் ஷேர் ஆட்டோவாகவும் இவை இயக்கப்படுகின்றன.
இதில் மட்டுமே 15 வகையான மாடலை இந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருப்பதால் இதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து தற்போது ‘டாடா ஏஸ் கோல்டு’ எனும் புதியரக வாகனமும் வந்துள்ளது.
இதன் விலை ரூ.3.75 லட்சம். இலகு ரக வர்த்தக வாகனமாக (எல்.சி.வி.) இது வந்துள்ளது.
வெள்ளை வண்ணத்தில் வந்துள்ள இந்த ஏஸ் கோல்டு கரடு முரடான சாலைகளிலும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு சிறப்பாக செயல்படும். இதில் ஸ்டாண்டர்டு மாடலைப் போன்றே வெளிப்புறத் தோற்றம் உள்ளது. ஆனால் உள்பகுதியில் வாகன ஓட்டி மற்றும் உடன் பயணிப்பவர்களுக்கு அதிக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இது 702 சி.சி. டீசல் என்ஜினைக் கொண்டது. மினி டிரக் வரிசையில் 2005-ம் ஆண்டு அறிமுகமான டாடா ஏஸ் இதுவரை மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதில் சரக்குகளைக் கையாள்வதற்கு ஏஸ், ஸிப், மெகா, மின்ட் ஆகியன ஏற்றவையாக உள்ளன. ஷேர் ஆட்டோ போல பயணிகள் போக்குவரத்துக்கு மேஜிக், மந்த்ரா, ஐரிஸ் போன்றவை சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துகின்றன.
தற்போது வந்துள்ள டாடா ஏஸ் கோல்டு மாடலுடன் கூடுதல் சேவைகளையும் இந்நிறுவனம் அளிக்கிறது. 24 X 7 பிரேக் டவுன் சேவை திட்டம், டாடா டிலைட் லாயல்டி புரோகிராம், டாடா ஸிப்பி உரிய நேர சர்வீஸ் திட்டம், டாடா கவச் விபத்து ரிப்பேர் உறுதி திட்டம் உள்ளிட்ட சேவைகளை அளிக்கிறது.