மத்திய அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்த ரூ.4,880 கோடி செலவு: பா.ஜனதாவினர் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? ராஜ் தாக்கரே கேள்வி
மத்திய அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்த ரூ.4 ஆயிரத்து 880 கோடி செலவு செய்தது பற்றி என்ன பதில் சொல்ல போகிறார்கள் என பா.ஜனதாவினருக்கு ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார்.
மும்பை,
மத்திய அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்த ரூ.4 ஆயிரத்து 880 கோடி செலவு செய்தது பற்றி என்ன பதில் சொல்ல போகிறார்கள் என பா.ஜனதாவினருக்கு ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார்.
பா.ஜனதா புகார்
நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மாநிலம் முழுவதும் பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார். நாந்தெட்டில் சமீபத்தில் நடந்த அவரது பிரசார கூட்டத்துக்கு திரளான மக்கள் வந்து இருந்தனர்.
இதையடுத்து ராஜ் தாக்கரேவின் பொதுக்கூட்ட செலவுகளை காங்கிரஸ் கட்சி செய்வதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது. மேலும் நாந்தெட்டில் நடந்த ராஜ் தாக்கரேயின் பிரசார கூட்ட செலவுகளை அந்த தொகுதி வேட்பாளரும், காங்கிரஸ் மாநில தலைவருமான அசோக் சவான் தேர்தல் செலவில் சேர்க்க வேண்டும் என மாநில கல்வி மந்திரி வினோத் தாவ்டே மாநில தலைமை தேர்தல் அதிகாரி அஸ்வனி குமாரிடம் புகார் அளித்தார்.
ராஜ் தாக்கரே கேள்வி
இந்தநிலையில், சோலாப்பூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜனதாவின் புகாருக்கு ராஜ் தாக்கரே பதில் அளித்து பேசினார். அவர் கூறியதாவது:-
பா.ஜனதாவினர் எனது பிரசார பொதுக்கூட்டத்துக்கு ஆகும் செலவு விவரங்களை கேட்கின்றனர். எனக்கு யார் நிதி உதவி செய்கின்றனர் என அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். ஒன்றுக்கும் உதவாத மத்திய அரசின் திட்டங்களை பிரபலப்படுத்த மற்றும் விளம்பரத்துக்காக பிரதமர் மோடி செலவு செய்த ரூ.4 ஆயிரத்து 880 கோடி பற்றி என்ன சொல்ல போகிறார்கள்?
பொய்யான விளம்பர படம்
மேலும் அமராவதி மாவட்டத்தில் உள்ள ஹரிசல் என்ற கிராமம் டிஜிட்டல் மயமான முதல் கிராமம் என பா.ஜனதாவினர் பொய் பிரசாரம் செய்தனர். அது தொடர்பான விளம்பரத்தில் நடித்த மனோகர் கட்கே புனேயில் வேலை தேடி கொண்டு இருக்கிறார்.
எனது தொண்டர்கள் அவரை இங்கு அழைத்து வந்துள்ளனர். மேலும் டிஜிட்டல் கிராமம் பற்றி எடுக்கப்பட்ட விளம்பர படம், அந்த கிராமத்திலேயே எடுக்கப்படவில்லை. அது மும்பை அருகில் படமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பா.ஜனதாவினர் பொய்யான விளம்பர படத்தை எடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர். முதல்-மந்திரியை இதை மறுத்து கருத்து கூற சொல்லுங்கள் பார்க்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.