பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடகத்தில் பிரசாரம் மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டுகோள்
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, கர்நாடகத்தில் பிரசாரம் செய்தார். மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
பெங்களூரு,
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, கர்நாடகத்தில் பிரசாரம் செய்தார். மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அமித்ஷா பிரசாரம்
கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டமாக 18, 23-ந் தேதிகளில் நடக்கிறது. பெங்களூரு உள்பட 14 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த முதல்கட்ட தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நேற்று ஓய்ந்தது. பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, கடைசி நாளில் கர்நாடகத்தில் பிரசாரம் செய்தார்.
அவர் தாவணகெரேவில் பா.ஜனதா வேட்பாளர் சித்தேஸ்வரை ஆதரித்து ஓட்டு சேகரித்தார். அதன் பிறகு அவர் ஹெலிகாப்டர் மூலம் துமகூருவுக்கு வந்தார். அவர் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக வந்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். தாவணகெரேயில் ஒன்னாளி பகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சித்தேஸ்வரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அமித்ஷா பேசியதாவது:-
வாக்களிக்க வேண்டும்
நான், ராகுல் காந்தி மற்றும் அவரது குழுவினரை பார்த்து, உங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்டு வருகிறேன். ஆனால் அவர் இதுவரை பதில் அளிக்கவில்லை. யாரை பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீங்களே முடிவு செய்யுங்கள்.
நான் கடந்த 5 ஆண்டுகளாக நாட்டை சுற்றி வந்துள்ளேன். நான் செல்லும் இடங்கள் எல்லாம், மோடி, மோடி என்ற கோஷம் தான் முழங்குகிறது. தலைவர்களே இல்லாதவர்கள், நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்குமாறு கேட்கிறார்கள். அத்தகையவா்களை புறக்கணித்து, பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும். மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும்.
தகுதியானவர்கள் யார்?
வளர்ச்சி விஷயங்களை கொண்டுள்ள தேசிய முற்போக்கு கூட்டணி ஒருபுறம், ராகுல் காந்தி மற்றும் அவரது குழுவினர் மற்றொரு புறம். நாட்டை ஆள தகுதியானவர்கள் யார்? என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.