தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இன்று கொண்டு செல்லப்படுகின்றன

நெல்லை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இன்று கொண்டு செல்லப்படுகின்றன.

Update: 2019-04-16 21:45 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இன்று கொண்டு செல்லப்படுகின்றன.

ஓட்டுப்பதிவு எந்திரங்கள்

தமிழகத்தில் நாளை (வியாழக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. நெல்லை தொகுதியில் அ.தி.மு.க.- தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர்கள் உள்பட 26 பேர் போட்டியிடுகிறார்கள். அதேபோல் தென்காசி தொகுதியில் 25 பேர் போட்டியிடுகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2,979 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான எந்திரம் உள்ளிட்ட தேர்தல் உபகரணங்களை கொண்டு செல்ல 267 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒரு மண்டல அலுவலருக்கு ஒரு வாகனங்கள் வீதம் 267 வாகனங்கள் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த வாகனங்களில் நேற்று காலையில் போலீஸ் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தும் பணி மும்முரமாக நடந்தது.

மண்டல அலுவலர்கள்

மண்டல அலுவலர்கள் செல்லும் ஒரு வாகனத்தில் ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீசார், 2 ஊர்காவல் படைவீரர்கள், 2 முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் செல்கிறார்கள். இவர்கள் அனைவரும் நேற்று பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தனர். அவர்களுக்கு போலீசார் பணி ஒதுக்கீடு செய்து உள்ளனர். இந்த வாகனங்கள் இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு சென்று அங்கிருந்து ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான எந்திரம் உள்ளிட்ட தேர்தல் உபகரணங்களை ஏற்றிக்கொண்டு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஒப்படைக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

மேலும் செய்திகள்