நெல்லை மாவட்டத்தில் 520 வாக்குச்சாவடிகளில் பெண்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள் கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் 520 வாக்குச்சாவடிகளில் பெண்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் 520 வாக்குச்சாவடிகளில் பெண்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது::-
520 வாக்குச்சாவடிகள்
நெல்லை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் கொண்டு செல்ல மண்டல அலுவலர்களுக்கு 267 வாகனங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த வாகனங்களில் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 194 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும் தபால் வாக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 6 ஆயிரத்து 385 பேர் தங்களுடைய ஓட்டை பதிவு செய்து உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றக்கூடிய 30 மைக்ரோ அப்சர்வர்கள் இவர்கள் பணிச்சான்று மூலம் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 725 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட உள்ளது. இதில் பணியாற்றக்கூடியவர்களும் ஓட்டுப்போட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 520 வாக்குச்சாவடிகளில் பெண்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. ஒரு சட்டசபை தொகுதிக்கு 4 மாதிரி வாக்குச்சாவடிகள் செயல்படும்.
மது விற்பனை அதிகரிப்பு
பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தலையொட்டி மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. மாவட்டத்தில் தற்போது 30 சதவீதம் மது விற்பனை அதிகரித்து உள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.