வயிற்றுக்கு இதமான பானம்

கோடை காலத்தில் சிலருக்கு வயிறு வீக்கம், வாயு பிரச்சினை தோன்றும். அதாவது குடல் மற்றும் வயிற்று பகுதியில் வாயு நிரம்பி காணப்படும். அதற்கு செரிமான அமைப்பு சீராக செயல்படாமல் இருப்பதே காரணம்.

Update: 2019-04-14 07:49 GMT
கோடை காலத்தில் சிலருக்கு வயிறு வீக்கம், வாயு பிரச்சினை தோன்றும். அதாவது குடல் மற்றும் வயிற்று பகுதியில் வாயு நிரம்பி காணப்படும். அதற்கு செரிமான அமைப்பு சீராக செயல்படாமல் இருப்பதே காரணம். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, கார்பனேட்டட் கலந்த பானங்களை பருகுவது, மலச்சிக்கல், மாதவிடாய் சுழற்சி போன்ற பல காரணங்களால் இத்தகைய பிரச்சினைகள் எழும். வாயு தொந்தரவு இருப்பவர்கள் அதற்கு காரணமான பால், பால் சார்ந்த பொருட்கள், பீன்ஸ், காலி பிளவர், முட்டைகோஸ், பிராக்கோலி போன்ற காய்கறிகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. மூலிகை டீ வகைகளை பருகி யும் வாயு தொல்லை பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

கோடை காலத்தில் ஏற்படும் செரிமான கோளாறு, வயிறு வீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு இஞ்சி நிவாரணம் தரும். இஞ்சியுடன் தேன், எலுமிச்சை ஆகியவற்றை பயன்படுத்தி டீ தயாரித்து பருகலாம். புதினா டீயும் இதமளிக்கும். வாயு தொல்லையால் இரைப்பையில் ஏற்படும் அழுத்தத்தை குறைப்பதற்கு இது உதவும். குடல் நோய் பாதிப்புக்கு ஆளானவர்களும் புதினா டீ பருகலாம். அடிவயிற்று வலியால் அவதிப்படுபவர்களுக்கும் புதினா டீ நிவாரணம் அளிக்கும்.

கோடை காலத்தில் உடல் உள் உறுப்புகளுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்களில் பெருஞ்சீரகம் முதன்மையானது. செரிமானம் சீராக நடைபெறவும் இது உதவும். வாயு தொல்லை பிரச்சினைகளையும் போக்கும். பெருஞ்சீரகத்தை சமையலில் சேர்ப்பதோடு டீயாகவும் தயாரித்து பருகலாம். வாயு தொல்லை, அஜீரண கோளாறுகளுக்கு ஓமத்தையும் பயன்படுத்தலாம். சிறிதளவு ஓமத்தை நீரில் கலந்து கொதிக்கவைத்து வடிகட்டி அதனுடன் இந்துப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம். தேனும் சேர்த்துக்கொள்ளலாம்.

மேலும் செய்திகள்