14 தொகுதிகளில் வியாழக்கிழமை முதல்கட்ட வாக்குப்பதிவு கர்நாடகத்தில் ஒரே நாளில் மோடி-ராகுல் காந்தி போட்டி பிரசாரம்
கர்நாடகத்தில் முதல்கட்டமாக 14 தொகுதி களுக்கு வருகிற வியாழக்கிழமை தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டனர். தலைவர்கள் முற்றுகையால் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் மொத்தம் 28 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் தென்கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கு வருகிற 18-ந்தேதியும், மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு வருகிற 23-ந்தேதியும் என இருக்கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளது. இதற்கான பகிரங்க பிரசாரம் வருகிற 16-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
இதனால் அரசியல் கட்சிகளின் தேசிய தலைவர்கள், மாநில தலைவர்கள் முகாமிட்டு தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக கர்நாடகத்தில் பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே பிரதமர் மோடி, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுபோல் மாநில தலைவர் எடியூரப்பா, மூத்த தலைவர்கள் ஈசுவரப்பா, ஜெகதீஷ்ஷெட்டர், ஸ்ரீராமுலு உள்ளிட்டோரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
அதுபோல் நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. இரு கட்சிகளின் தேசிய தலைவர்களும், மாநில தலைவர்களும் பம்பரமாக சுழன்று தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் மந்திரிகள் உள்பட பலரும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி கொப்பல் தொகுதிக்கு உட்பட்ட கங்காவதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அதுபோல் கடந்த 31-ந்தேதி முன்பு கர்நாடகம் வந்த ராகுல்காந்தி, பெங்களூருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கர்நாடகத்தில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். பிரதமர் மோடி தட்சிணகன்னடா தொகுதிக்கு உட்பட்ட மங்களூருவில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டார். அவர், தட்சிணகன்னடா, உத்தரகன்னடா, உடுப்பி-சிக்கமகளூரு ஆகிய தொகுதிகளின் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய மோடி, “புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 44 வீரர்கள் உயிர் நீத்தனர். அதற்கு நாம் உரிய பதிலடி கொடுத்துள்ளோம். அவர்களின் வீட்டுக்கு சென்றே தாக்கிவிட்டு வந்துள்ளோம். இதற்கு, எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தலைவர்கள் சாட்சி கேட்கிறார்கள்” என்று ஆவேசமாக பேசினார்.
அதைதொடர்ந்து இரவு 7 மணி அளவில் பெங்களூருவில் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசாரத்திலும் மோடி கலந்துகொண்டு பேசினார்.
அதே போல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் நேற்று மதியம், கோலாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “ஊழலை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று கூறிய நாட்டின் காவலாளி (பிரதமர் மோடி) ஒரு திருடர். அவரது ஆட்சியில் தான் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தவர்கள் வெளிநாட்டிற்கு தப்பி ஓடினர். மோடியும், மோசடி செய்தவர்களும் ஒரே திருட்டு குழு” என்று கடுமையாக சாடினார்.
பின்னர் ராகுல்காந்தி சித்ரதுர்காவில் நடந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். நேற்று ஒரே நாளில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி பிரசாரம் செய்ததால் கர்நாடகத்தில் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இரு கட்சிகளின் தொண்டர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
முதல் கட்ட தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் ஓய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனால் தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதன் மூலம் முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.