மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு நினைவு திரும்பியது குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர்

மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு நினைவு திரும்பியது. இதனால் அவரது குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

Update: 2019-04-13 22:15 GMT
திருப்பத்தூர், 

திருப்பத்தூர் ரெயில்வே ஸ்டேசன் ரோட்டில் உதவும் உள்ளங்கள் அமைப்பின் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த வட மாநிலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் இந்த காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.

காப்பகத்தில் தொடர்ந்து வழங்கப்பட்ட மருத்துவ உதவி மற்றும் பயிற்சியின் வாயிலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நபருக்கு நினைவு திரும்பியது. தனது பெயர் ஜனார்த்தனன், பீகார் மாநிலம் பச்சோரி கிராமத்தை சேர்ந்தவன் என கூறினார். மற்ற விவரங்கள் அவரால் கூற தெரியவில்லை. பல முயற்சிகளுக்கு இடையில் அவரது இருப்பிடம் கண்டறியப்பட்டது.

பீகார் மாநிலம், காசிபூர் மாவட்டம், ஜமானியா வட்டம், பச்சோரி கிராமத்தை சேர்ந்த இவருக்கு கமலா என்ற மனைவியும், மங்கிதா, சாந்தி ஆகிய 2 மகள்கள் இருப்பது தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக மனக்குழப்பம் ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை என்றும் தெரியவந்தது.

அதன்பிறகு காப்பகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட ஜமானியா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஜனார்த்தனனின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் ஜனார்த்தனனின் மனைவி கமலா, மகள் சாந்தி, சகோதரர் அங்கர்சிங், உறவினர்கள் லால்பகதூர், விஜய் பகதூர் ஆகியோர் திருப்பத்தூரில் உள்ள காப்பகத்திற்கு வந்தனர். ஜனார்த்தனனை கண்டதும் அவர்கள் கட்டி தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

பின்னர் அவரது மனைவி கமலா கூறுகையில், ஜனார்த்தனன் காணாமல் போய் 16 ஆண்டுகள் ஆகிறது, அந்த சமயம் மகள்கள் சிறுமிகளாக இருந்தனர். குடும்பத்தை நடத்தி பெண் குழந்தைகளை காப்பாற்ற மிகவும் சிரமப்பட்டேன். கஷ்டப்பட்டு உழைத்து 2 மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்தேன். ஒவ்வொரு நாளும் இறைவனை வேண்டி கொண்டேன். கணவர் திரும்பி வருவார் என ஏக்கத்தோடு தவித்து வந்தேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. கணவர் மீண்டும் கிடைத்தது இறைவன் செயல், இது அவருக்கு மறுபிறவி, நாங்கள் அளவற்ற மகிழ்ச்சியில் உள்ளோம்’ என்றார்.


அதன்பிறகு திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா முன்னிலையில், ஜனார்த்தனன் அவரது மனைவி கமலா மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். நகராட்சி ஆணையாளர் சந்திரா பயண செலவுக்காக ரூ.7 ஆயிரம் வழங்கினார்.

அப்போது சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் மோகன், தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், உதவும் உள்ளங்கள் தலைவர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்