சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக மாணவர்கள் அரசியலை கையில் எடுக்க வேண்டும் - திருமுருகன் காந்தி பேச்சு

‘சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக மாணவர்கள் அரசியலை கையில் எடுக்க வேண்டும்’ என்று கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசினார்.

Update: 2019-04-13 23:15 GMT
கோவை,

மே பதினேழு இயக்கம் சார்பில் ‘தமிழ்நாட்டின் உரிமைகளை காப்போம்’ என்ற பெயரில் பொதுக்கூட்டம் கோவை புதுசித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசியதாவது:-

மே பதினேழு இயக்கத்தின் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி கிடைத்திருக்கிறது என்றால் தமிழகத்தில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. கோவை மாநகரை மதவெறி மற்றும் தனியார் மயத்தை நோக்கி தள்ளியுள்ளனர்.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு காரணம் அவர்களை வணிகத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்காகத்தான். அதை செய்பவர்கள் பா.ஜனதா, இந்து மகா சபை உள்பட இந்துத்துவா அமைப்புகள். பெரியார் கருத்தை எதிர்க்க முடியாதவர்கள் அவரது சிலையை உடைக்கிறார்கள்.

கடந்த 5 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் தமிழகம் பின்னுக்கு தள்ளப்பட்டது. கோவையில் சிறு, குறு தொழில்கள் நசிந்து விட்டன. பொருளாதாரம் பின்தங்கி விட்டது. சிறுவாணி தண்ணீரையும், பிரான்சு நாட்டு சூயஸ் நிறுவனத்துக்கு விற்று விட்டனர். இப்படி பல வகையிலும் கோவை உள்பட தமிழகம் மத்திய பா.ஜனதா ஆட்சியினால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது.

கோவை ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால் உள்பட பல்வேறு இடங்களில் இப்போது குஜராத்திகாரர்களும், வடமாநிலகாரர்களும் தான் வணிகம் செய்கிறார்கள். இதன் மூலம் கோவையின் அடிப்படை கட்டமைப்பை அசைத்து பார்க்க தொடங்கியிருக்கிறார்கள். ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் அனைத்தையும் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மத்திய அரசு தயாராகி வருகிறது. அதன் முதல்படி தான் கோவையின் குடிநீர் வினியோக உரிமையை சூயஸ் நிறுவனத்துக்கு அளித்தது தான். ஜி.எஸ்.டி.யினால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழகம் தான்.

இத்தகைய செயல்களை தடுத்து நிறுத்துவதற்காகவும், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் மாணவர்கள் அரசியலை கையில் எடுக்க வேண்டும். இதற்குதான் மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது. பிற்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட டாக்டர் அம்பேத்கருக்கு கோவையில் சிலை இல்லாதது வேதனையளிக்கிறது. எனவே கோவையில் அம்பேத்கருக்கு சிலை வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்