நெமிலியில் வாக்காளர்களுக்கு கொடுக்க முயன்ற ரூ.2 லட்சம் பறிமுதல் 2 பேரிடம் விசாரணை
நெமிலியில் வாக்காளர்களுக்கு கொடுக்க முயன்ற ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பணம் வினியோகித்த 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பனப்பாக்கம்,
வேலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்து வருகின்றனர். வாகன தணிக்கையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் பறக்கும் படையினர் தேர்தல் தொடர்பாக வரும் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நெமிலி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு நெமிலி பகுதியில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பறக்கும் படை அதிகாரி பழனிராஜன் தலைமையிலான குழுவினர் நெமிலியை அடுத்த மூலப்பட்டு கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாக்காளர்களுக்கு 2 பேர் வீடு, வீடாக சென்று பணம் கொடுத்து வந்துள்ளனர். அதிகாரிகள் இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நெமிலி முன்னாள் பேரூராட்சி தலைவர் வினோபா (வயது 62), பொன்னை கிராமத்தை சேர்ந்த தி.மு.க. உறுப்பினர் ரமேஷ் (49) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் வாக்காளர்களுக்கு கொடுக்க முயன்ற 2 லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வினோபா, ரமேஷ் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நெமிலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.