கர்நாடகத்தில் ‘20 சதவீதம் கமிஷன் கேட்கும் ஆட்சி நடக்கிறது’ - பிரதமர் மோடி கடும் தாக்கு

கொப்பலில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர், கர்நாடகத்தில் 20 சதவீத கமிஷன் கேட்கும் ஆட்சி நடப்பதாக குற்றம்சாட்டினார்.

Update: 2019-04-13 00:18 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் வருகிற 18-ந் தேதியும், 2-வது கட்ட தேர்தல் 23-ந் தேதியும் நடக்கிறது. பிரதமர் மோடி கடந்த 9-ந் தேதி சித்ரதுர்கா மற்றும் மைசூரு-குடகு ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.

இந்த நிலையில் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் கொப்பல் தொகுதியில் உள்ள கங்காவதியில் பா.ஜனதாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் மடாதிபதி கவிசித்தேஸ்வரா சுவாமியை வணங்கிவிட்டு தனது பேச்சை தொடர்ந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டின் பாதுகாப்பு, சேவைக்காக எல்லா தியாகத்திற்கும் தயாராக உள்ள ராணுவ வீரர்கள், மிக குறைந்த வெப்பநிலை உள்ள பகுதியிலும் பணியாற்றுகிறார்கள். மாதக்கணக்கில் உணவு இல்லாவிட்டாலும், தங்களின் பணியை செய்ய தவறுவது இல்லை. அத்தகைய ராணுவ வீரர்களின் சேைவயை நீங்கள் (எதிர்க்கட்சிகள்) புரிந்துகொள்வது இல்லை. கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, 2 வேளை உணவுக்கு வழி இல்லாத ஏழைகள் தான் ராணுவத்தில் சேருகிறார்கள் என்று கூறி இருக்கிறார்.

இதன் மூலம் குமாரசாமி ராணுவத்திற்கு அவமானம் இழைத்துவிட்டார். நான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என்று கூறி இதில் இருந்து தப்பிக்க முடியாது. உங்கள் இதயத்தில் என்ன இருக்கிறதோ அது வெளிப்பட்டுள்ளது. இதை வைத்து நீங்கள் ஓட்டு கேட்கிறீர்களா?. இந்திய ராணுவத்தை அவமானம் செய்கிறவர்கள், நீரில் மூழ்கி சாக வேண்டும். வெள்ளி ஸ்பூனுடன் பிறந்தவர்களுக்கு ராணுவ வீரர்களின் கஷ்டங்கள் புரியாது.

நமக்கு நாடு தான் முதலாவது என்பவர்களுக்கும், குடும்பம்தான் முதலாவது என்று சொல்பவர்களுக்கும் இடையே இந்த தேர்தல் நடக்கிறது. தேவேகவுடா மகன் (மந்திரி எச்.டி.ரேவண்ணா), மீண்டும் மோடி பிரதமரானால், அரசியலை விட்டு விலகுவதாக கூறியுள்ளார்.

ஆனால் அவரது பேச்சை நம்ப முடியாது. தேவேகவுடா குடும்பத்தினர் எப்போதும் சொன்னபடி நடந்து கொண்டது இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, மோடி பிரதமரானால் அரசியலை விட்டு விலகுவதாக தேவேகவுடா சொன்னார். அவர் அரசியலை விட்டு விலகினாரா?.

அவர் தற்போது தனது பேரன்களையும் அரசியலுக்குள் கொண்டு வந்துள்ளார். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் குடும்ப அரசியலை நடத்துகிறது. காங்கிரசின் ஒரே ‘மிஷன்’, அது ‘கமிஷன்’. கர்நாடகத்தில் முன்பு இருந்த காங்கிரஸ் அரசு 10 சதவீத ‘கமிஷன்’ அரசாக இருந்தது.

இப்போது காங்கிரசுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சியும் சேர்ந்து கொண்டுள்ளது. அதனால் 10+10 என 20 சதவீத ‘கமிஷன்’ கேட்கும் அரசாக மாறிவிட்டது. மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் அரசு அமைந்து சில மாதங்கள் தான் ஆகிறது.

ஆனால் அங்கிருந்து கோடிக்கணக்கான ரூபாய், டெல்லிக்கு வந்துள்ளது. அது ஏழைகள் குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் நலனுக்காக செலவிட வேண்டிய பணம். இப்படி தான் ஏழைகளுக்கு செல்ல வேண்டிய பணத்தை காங்கிரஸ் பறித்துக்கொள்கிறது.

இந்த பகுதியில் துங்கபத்ரா அணை இருந்தும் நீங்கள் தண்ணீருக்காக கஷ்டப்படுகிறீர்கள். இதற்கு காரணம் என்ன?. விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தனர். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

மத்திய அரசின் கிஷான் சம்மான் நிதி யோஜனா திட்டத்திற்கு கர்நாடக அரசு விவசாயிகளின் பெயர் பட்டியலை வழங்கவில்லை. விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயனை இந்த அரசு தடுத்துவிட்டது. மீண்டும் மோடி பிரதமரானால், அனைத்து விவசாயிகளுக்கும் இந்த உதவி திட்டத்தின் பயன் கிடைக்கும்.

60 வயதை தாண்டிய விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கிறோம். இதற்காக ஒரு ஆணையத்தை உருவாக்குவோம்.

நாட்டில் எந்த மூலைக்கு சென்றாலும், மீண்டும் மோடி என்ற குரல் தான் கேட்கிறது. நாடு முழுவதும் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. நீங்கள் காட்டும் அன்பு, டெல்லியில் உள்ள சிலரின் தூக்கத்தை கெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த 5 ஆண்டுகளாக அதிகார பசியோடு இருக்கிறது.

இங்குள்ள ஆட்சியாளர்கள், சுல்தானுக்கு விழா எடுக்கிறார்கள். ஆனால் ஹம்பி விழா நடத்த நிதி இல்லை என்று சொல்கிறார்கள். நாட்டில் பாகிஸ்தானின் கொள்கையை அமல்படுத்த நினைப்பவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

நீங்கள் பா.ஜனதாவுக்கு வழங்கும் ஓட்டு, அது மோடி கணக்கில் நேராக வந்து சேரும். மறவாமல் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு மோடி பேசினார்.

முன்னதாக மோடி, தனி விமானம் மூலம் உப்பள்ளி விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் கொப்பலுக்கு பகல் 3.30 மணிக்கு வந்தார். பகல் 3.35 மணிக்கு பேச்சை ஆரம்பித்த மோடி, மாலை 4.05 மணிக்கு நிறைவு செய்தார்.

இந்த பிரசார கூட்டத்தில் பா.ஜனதா தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். இந்த பிரசார கூட்டத்தின் மூலம் பிரதமர் மோடி, கொப்பல், ராய்ச்சூர், பல்லாரி ஆகிய நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த கூட்டத்தில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, ஸ்ரீராமுலு உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்