மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க புதிய சக்கரநாற்காலிகள் கலெக்டர் தகவல்
நடைபெற உள்ள தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க புதிய சக்கரநாற்காலிகள் வாங்கப்பட்டுள்ளது. என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
சிவகங்கை,
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி நடைபெற உள்ள சிவகங்கை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட அளவிலுள்ள மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமின்றி வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சாய்தளம், குடிநீர், கழிப்பறை போன்ற அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் ஒரு சக்கரநாற்காலி தயார் நிலையில் இருந்திடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது மாவட்டத்தில் ரூ.49 லட்சம் மதிப்பில் 876 புதிய சக்கரநாற்காலிகள் வாங்கப்பட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ள, வாக்குச்சாவடிகளுக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ள சக்கரநாற்காலிகளை கலெக்டர் பார்வையிட்டார். நிகழ்ச்சியின் போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார், முடநீக்கியல் பயிற்சியாளர் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.