திருப்பூரில் மின்மாற்றிகள் மீது கார் மோதி விபத்து, 6 பேர் காயம்

திருப்பூரில் மின்மாற்றிகள் மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-04-12 23:10 GMT
நல்லூர்,

திருப்பூர், வெள்ளியங்காடு இ.பி.நகர், மரகதம் லே-அவுட் பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் பிரபாகரன் (வயது 37). இவர் திருப்பூர் மார்க்கெட்டில் வெங்காய மண்டி நடத்தி வருகிறார். இவரது மனைவி வினிதா (30). இவர்களுக்கு மேக்னா (8), சுஷ்மிதா என இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரபாகரன் தனது குடும்பத்தினருடன் காரில் தாராபுரம் அருகே நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளனர். அப்போது காரில் பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த தொல்காப்பியன் (43), அவரது மனைவி ஆனந்தி (38) ஆகியோரையும் அழைத்து சென்றுள்ளார்.

திருமண நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று 6 பேரும் அதே காரில் திருப்பூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை பிரபாகரன் ஓட்டினார். தாராபுரம் ரோடு, பொன்கோவில் நகர், அருகே கார் வந்து கொண்டிருக்கும் போது சாலையில் குறுக்கே நாய் ஒன்று வந்ததாக கூறப்படுகிறது.

அந்த நாய் மேல் மோதாமல் இருக்க, காரை பிரபாகரன் திருப்பி உள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த மின் மாற்றிகள் மீது மோதியது. கார் மோதிய வேகத்தில் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு இருந்த மின்கம்பம் உடைந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டிச்சென்ற பிரபாகரன், வினிதா, மேக்னா, சுஷ்மிதா மற்றும் தொல்காப்பியன், ஆனந்தி ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்ததும் அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிச்சென்று காரில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனைக்கு சென்றனர்.

இதுகுறித்து திருப்பூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்