40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் - ஊரணிபுரத்தில் கி.வீரமணி பேச்சு

40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று, ஊரணிபுரத்தில் கி.வீரமணி கூறினார்.;

Update:2019-04-13 03:45 IST
ஒரத்தநாடு, 

தஞ்சை மாவட்டம் ஊரணிபுரத்தில் திராவிடர் கழகம் சார்பில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்துக்கு ஆதரவாக தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு திராவிடர் கழக தஞ்சை மாவட்ட செயலாளர் அருணகிரி தலைமை தாங்கினார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பா. ஜனதா கட்சி சொல்லும் அனைத்தையும் கேட்கும் அடிமை அரசாக தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை. அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு உள்ளிட்ட சமூகவிரோத செயல்களை அரங்கேற்றி மதகலவரத்தை தூண்டி அதன்மூலம் ஆதாயம் தேட பார்க்கிறார்கள். காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு எதிரான நிலைபாடுகளை எடுத்த பா.ஜனதா கட்சியோடு அ.தி.மு.க கூட்டணி அமைத்து விவசாயிகளை வஞ்சித்துவிட்டது.

இந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். விவசாயிகளுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். இதன்மூலம் வடமாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார்.

இவ்வாறு கி.வீரமணி கூறினார். கூட்டத்தில் தி.மு.க ஒன்றிய செயலாளர் மகேஷ்கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்