சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு
சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது.
சத்தியமங்கலம்,
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி சத்தி தாசில்தார் அலுவலகத்தில் இரவு–பகலாக நடைபெற்றது. இந்த பணிகளை நேற்று முன்தினம் நீலகிரி மாவட்ட கலெக்டர் நேரில் வந்து பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று காலை எந்திரங்கள் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள ஒரு தனி அறையில் வைக்கப்பட்டது. அதன்பின்னர் அனைத்து கட்சியினர் முன்னிலையில் அந்த அறையை பூட்டி பவானிசாகர் தொகுதி தேர்தல் அலுவலர் விஜய்சங்கர், தாசில்தார் கார்த்திக் ஆகியோர் சீல் வைத்தனர். மேலும் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டு சீல் வைத்தார்கள்.
இதுபற்றி தேர்தல் அலுவலர்கள் கூறும்போது, ‘பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 294 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு எந்திரத்தை இயக்க ஒரு எந்திரமும், வாக்குபதிவு பட்டனை அமுக்க ஒரு எந்திரமும், வாக்குப்பதிவாகி விட்டதா? என்பதை சரிபார்க்க ஒரு எந்திரமும் என 3 எந்திரங்கள் பயன்படுத்தப்படும். மேலும் எதாவது வாக்குச்சாடியில் எந்திரங்கள் பழுதானால் அங்கு உடனடியாக கொண்டுசெல்ல மாற்று எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன‘ என்றார்.