100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்

நெல்லை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணியை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

Update: 2019-04-12 21:30 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நெல்லையில் நேற்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணியை கலெக்டர் ஷில்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து தாசில்தார் விமலா ஓட்டி சென்ற ஸ்கூட்டரில் கலெக்டர் ஷில்பா பின்னால் அமர்ந்து சென்றார். இதேபோல், பயிற்சி உதவி கலெக்டர் சுகபுத்ரா ஓட்டி சென்ற ஸ்கூட்டரில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் பின்னால் அமர்ந்து சென்றார்.

இந்த பேரணி வண்ணார்பேட்டை பஸ் நிலையம், பாளையங்கோட்டை மார்க்கெட், சமாதானபுரம் வழியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது. பேரணியில் சென்றவர்கள், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். பேரணியில் பங்கேற்ற கலெக்டர் ஷில்பா, வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பொதுமக்களிடம் ‘1950’ தேர்தல் தொடர்பான சேவை எண் குறித்த தகவல் அடங்கிய துண்டுபிரசுரங்களை வழங்கினார். மேலும் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய அவர், அரசு பஸ்களில் 100 சதவீத வாக்களிப்பு தொடர்பான ஒட்டுவில்லைகளை ஒட்டினார்.

இந்த பேரணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தேர்தல் தாசில்தார் புகாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்