வாக்காளர்கள் எந்த ஒரு சிரமமும் இன்றி 100 சதவீதம் வாக்களிக்க ஏற்பாடு - கலெக்டர் சுரேஷ்குமார் தகவல்
வாக்காளர்கள் எந்த ஒரு சிரமமும் இன்றி 100 சதவீதம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.
மயிலாடுதுறை,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அதன்படி மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பாளர்களின் சின்னங்களை வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி தேர்தல் பார்வையாளர்கள், அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த பணியை நாகை மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுரேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து கலெக்டர், நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தலை முன்னிட்டு 54 தேர்தல் பறக்கும் படையினர், 18 நிலையான கண்காணிப்புக்குழுவினர், 12 வீடியோ கண்காணிப்பு குழுவினர் உள்ளிட்ட 102 குழுக்கள் 24 நேரமும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதுவரை நன்னடத்தை விதிகள் தொடர்பாக 46 குற்ற வழக்குகள் பல்வேறு அரசியல் கட்சிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 350-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றன.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குடிநீர் வசதி, சுகாதாரவசதி, பாதுகாப்பு வசதி போன்ற குறைந்தபட்ச வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருகின்றன. அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு சக்கர நாற்காலி வசதி, நகரும் நடைமேடை வசதி, அவர்களுக்கு உதவி புரிய தன்னார்வலர்கள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த தேர்தல் தொடர்பாக பிரச்சினைகள் இருந்தால் 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அந்த எண் 24 மணி நேரமும் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருக்கும். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படையினர் பணியில் அமர்த்தப்படுவார்கள். அந்த வாக்குச்சாவடிகளில் நேரடி வீடியோ பதிவும் செய்யப்படும். நுண் பார்வையாளர்களும் அந்த வாக்குச்சாவடியை பணியில் இருந்து கண்காணிப்பர். வாக்காளர்கள் எந்த ஒரு சிரமமும் இன்றி 100 சதவீதம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இதற்கு வாக்காளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் 14 லட்சத்து 66 ஆயிரத்து 810 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 829 மையங்களில் 1,738 வாக்குச்சாவடிகள் உள்ளன. 79 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்காக தபால் வாக்குப்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை தேர்தல் பணியாளர்களுக்கு மட்டுமல்லாமல், இந்த பணியில் ஈடுபட்டுள்ள டிரைவர்கள், சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பணியாளர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தபால் வாக்குகளை பொறுத்தவரையில் அந்தந்த பயிற்சி மையங்களிலேயே வாக்குப்பதிவு செய்யலாம். இன்று (சனிக்கிழமை) நடைபெறும் பயிற்சி வகுப்பிலும் தபால் வாக்குகளை பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் உதவி கலெக்டர் கண்மணி மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.