திருச்சியில் நுங்கு, வெள்ளரி விற்பனை அமோகம்
திருச்சியில் சுட்டெரிக்கும் வெயிலின் வெப்ப தாக்கத்தில் இருந்து உடலை காக்கும் நுங்கு விற்பனை அமோகமாக நடக்கிறது.
திருச்சி,
திருச்சியில் சுட்டெரிக்கும் வகையில் வெயில் அடித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள இளநீர், கம்மங்கூழ், மோர் மற்றும் குளிர்பானங்களை பொதுமக்கள் அருந்தி வருகிறார்கள். மேலும் தர்பூசணி போன்றவற்றையும் வாங்கி சாப்பிடுகின்றனர். அவற்றுக்கு மேலாக பனை மரங்களில் இயற்கையாக விளையும் நுங்கு உடல் சூட்டை தணிக்க வல்லது. கோடை காலத்தில் அனல் காற்று வீசும்போது ஒரு சிலருக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்து விடும். இதனால் ரத்த ஓட்டத்திலும் பிரச்சினை ஏற்பட்டு மயக்க நிலைக்கு செல்வதுண்டு. இதை தவிர்ப்பதற்கு தினமும் காலையில் கொஞ்சம் நுங்கு சாப்பிட்டு வெளியில் சென்றால், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து உடலை காக்க முடியும்.
மேலும் உடல் அதிகம் வெப்பமடையும் வகையில் பணிபுரிபவர்கள், கடின உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு சுலபமாக நீர்ச்சத்து இழப்பு மற்றும் பிற சத்துகளும் உடலை விட்டு வெளியேறுகிறது. இப்படிப்பட்டவர்கள் தினமும் நுங்கு சாப்பிடுவதால் உடல் இழக்கும் சத்துகளுக்கு ஈடுசெய்திட முடியும். அத்துடன் கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள் நீங்கும். அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினையில் இருந்தும் விடுபட உதவும்.
அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டவர்கள் சரியான அளவில் நுங்கு சாப்பிடுவதும் நல்ல பலனை தரும். நுங்கு மட்டுமல்லாது பனைமரத்தில் இருந்து உற்பத்தியாகக்கூடிய பதனீர் மற்றும் பனங்கிழங்கு ஆகியவையும் உடல் நலத்திற்கு ஏற்றதாகும். திருச்சி மாநகரில் வெளிமாவட்டங்களில் இருந்து நுங்கு, பதனீர் போன்றவை கொண்டு வரப்பட்டு விற்பனை அமோகமாக நடக்கிறது. மேலும் பனை மரங்கள் அதிகம் உள்ள இடங்களில் நேரடியாகவே சென்று நுங்கு வெட்டி சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகரில் இருந்து அதிக அளவில் பதனீர் மற்றும் நுங்குகளை வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.
திருச்சியில் தில்லைநகர், தென்னூர், கே.கே.நகர், சத்திரம் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரம் நுங்கு விற்பனை அதிக அளவில் நடக்கிறது. இயற்கையாக கிடைத்தது என்பதால் வெயிலை சமாளிக்க அதிகமானோர் விரும்பி சாப்பிடுகிறார்கள். திருச்சி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான கீழக்குறிச்சி, லால்குடி, திருவெறும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நுங்கு மற்றும் பதனீர் விற்பனை அமோகமாக நடக்கிறது.
இதுபோல வெப்ப தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வெள்ளரி பிஞ்சு, முலாம் பழம், தர்பூசணி உள்ளிட்டவற்றின் விற்பனையும் அமோகமாக நடக்கிறது. திருச்சி மாநகரில் ஆங்காங்கே சாலையோரம் திடீர் தள்ளுவண்டி கடைகள் ஏற்படுத்தப்பட்டு வெள்ளரி பிஞ்சு, முலாம் பழம், தர்பூசணி, கம்மங்கூழ் உள்ளிட்டைவை விற்பனை செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.
காந்தி மார்க்கெட்டிலும் வெள்ளரி பிஞ்சு வரத்து அதிகரித்துள்ளது.