அண்ணன் இறந்த இடத்தில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த மெக்கானிக் போலீசார் விசாரணை
அண்ணன் இறந்த இடத்தில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த மெக்கானிக் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி,
திருச்சி மேலசிந்தாமணி பாலகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் மணிரத்னம் (வயது 27). இவர் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவரது அண்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் அறிவாலயம் அருகே ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் மணிரத்னம் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் மணிரத்னம் நேற்று அதிகாலை கலைஞர் அறிவாலயம் அருகே ரெயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து அப்பகுதியினர் திருச்சி ஜங்ஷன் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மணிரத்னத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மணிரத்னம் பிணமாக கிடந்தது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அவர் எப்படி இறந்தார்? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் இறந்த இடத்திலேயே மணிரத்னமும் இறந்தது அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்ணன் இறந்த துக்கத்தில் அவரும் தற்கொலை செய்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இது குறித்து ரெயில்வே போலீசாரிடம் கேட்ட போது, அவர் ரெயிலில் அடிபட்டு இறந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்படுவதாக தெரிவித்தனர்.