பாடம் சரியாக நடத்தப்படவில்லை என தனியார் பயிற்சி மைய மாணவர்கள் போலீசில் புகார்

கரூரில் அரசு போட்டித்தேர்வுக்கான தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்கள் சிலர், தங்களுக்கு சரிவர பாடம் நடத்தப்படுவதில்லை என்கிற குற்றசாட்டினை முன்வைத்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

Update: 2019-04-12 22:00 GMT
கரூர், 

கரூர் கோவை ரோட்டில் டி.என்.பி.எஸ்.சி., ரெயில்வே, வங்கி, ஆசிரியர் தகுதி தேர்வு உள்ளிட்ட அரசு போட்டித்தேர்வுகளுக்காக பயிற்சி அளிக்கும் ஒரு தனியார் பயிற்சி மையம் செயல்படுகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் சிலர் நேற்று கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் அனைவரும் பட்டப்படிப்பு, முதுகலைபட்டப்படிப்பு உள்ளிட்டவை படித்து இருக்கிறோம். அரசு பணிகளில் சேருவதை இலக்காக கொண்டு கரூரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படித்து வருகிறோம். இந்த நிலையில் அந்த பயிற்சி மைய நிர்வாகத்தினர் எங்களிடம் இருந்து கட்டணத்தை பெற்று கொண்டு சரிவர பாடம் நடத்துவதில்லை. மாறாக பாடம் எடுக்க கூடிய ஆசிரியர்களையும் அடிக்கடி மாற்றம் செய்து விடுகின்றனர். இது குறித்து பயிற்சி மைய நிர்வாகத்தில் புகார் அளித்த போதிலும் அதனை கண்டு கொள்வதில்லை.

எனவே இன்னும் சில மாதங்களில் அடுத்தடுத்து அரசு பணிக்கான பல்வேறு போட்டி தேர்வுகள் வர இருப்பதால், எங்களை தயார்படுத்தி கொள்ளும் பொருட்டு உரியமுறையில் பயிற்சி அளிக்க வழிவகை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்று கொண்ட போலீசார் இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட பயிற்சி மைய நிர்வாகத்தினரை அழைத்து, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உரிய முறையில் பயிற்சி அளிக்குமாறு அறிவுறுத்தி அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்