குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரம்

குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங் களில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

Update: 2019-04-12 22:30 GMT
குளித்தலை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 18-ந்தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதியில் பல்வேறு தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் ஒருபகுதியாக குளித்தலை சட்டமன்ற தொகுதியில் உள்ள 267 வாக்குச் சாவடிகளுக்கும் தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஏற்கனவே கோட்டாட்சியர் அலுவலகத்தில் சீல்வைக்கப்பட்ட அறையில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் வாக்குப் பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்துவதற்காக பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து எந்திரங்களையும் கோட்டாட்சியரும் உதவி தேர்தல் அலுவலருமான லியாகத் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியே எடுக்கப்பட்டன. இதையடுத்து வாக்குப் பதிவு எந்திரத்தில் சின்னங்களை பொருத்தும் பணியில் அதிகாரிகள் பலர் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி சின்னங்கள் பொருத்தும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் இரண்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வைக்கவுள்ள இரண்டு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் நோட்டாவுடன் சேர்த்து மொத்தம் 20 சின்னங்களை வாக்கு பதிவு எந்திரங்களில் அதிகாரிகள் பொருத்தினார்கள்.

பின்னர் வாக்குப்பதிவு மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு கட்டுபாட்டு எந்திரங்களையும் ஒன்றாக இணைத்து வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள சின்னங்களுக்கு எதிராக உள்ள பட்டன்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இயக்கி சரியாக வாக்குகள் பதிவாகிறதா என்றும் வாக்காளர் சரிபார்ப்பு எந்திரத்தில் அந்தந்த சின்னங்கள் சரியாக அச்சிடப்பட்டு காட்டப்படுகிறதா என்றும் சரிபார்த்து சீல் வைக்கும் பணியை மேற்கொண்டனர். மேலும் அதிகாரிகளால் சரிபார்த்து வைக்கப்பட்ட எந்திரங்களில் பல தேர்வு செய்யப்பட்டு அதில் பலமுறை மாதிரி வாக்குப்பதிவு செய்து பார்க்கப்பட்டது.

ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா 2 வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு வாக் காளர் சரிபார்ப்பு எந்திரம், ஒரு கட்டுபாட்டு எந்திரம் என 4 எந்திரங்கள் வீதம் 267 வாக்குச்சாவடிக்கும் மொத்தம் ஆயிரத்து 68 எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. மேலும் இதில் ஏதேனும் எந்திரங்கள் பழுதடைந்தால் அதற்கும் பதிலாக பயன்படுத்த கூடுதல் எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குளித்தலை பகுதியில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. இதனால் வாக்குப் பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி பாதிக்கப்பட்டது. இந்த மின்தடை காரணமாக இப்பணிகளை விரைவாக முடிக்க முடியாமல் அதிகாரிகள் சற்று சிரமத்திற்குள்ளாகினர்.

மேலும் செய்திகள்