மோப்ப சக்தியின் பயன்

பறவைகள் தங்கள் மோப்ப சக்தி மூலம் இரை தேடுகின்றன

Update: 2019-04-12 08:42 GMT
பூச்சி இனங்கள், மீன்கள், ஊர்வன மற்றும் பாலூட்டி இனங்கள் தங்களது மோப்ப சக்தி மூலம் தங்களது இரை மற்றும் எதிரிகளை அடையாளம் காணுகின்றன. அதுபோல பறவை இனங்களில் சில குறிப்பிட்ட வகை பறவைகள் தங்கள் மோப்ப சக்தி மூலம் இரை தேடுகின்றன, எதிரிகளிடம் இருந்து தப்பிக்கின்றன. இது பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்...

கிவி பறவை

நியூசிலாந்து நாட்டில் அதிகமாக காணப்படும் பறவை கிவி. இதன் மூக்கு (அலகு) நீளமாக, கூர்மையாக இருக்கும். அலகின் நுனிப்பகுதியில் சிறிய துளைகள் (நாசித்துவாரம்)உள்ளது. இதன் மூலம் தான் தரையில் உள்ள தங்கள் இரையை மோப்பம் பிடித்து இவை பிடித்து உண்ணுகின்றன. உலகில் உள்ள பறவை இனங்களில் மோப்ப சக்தி மூலம் தங்கள் இரையை தேடிப்பிடிக்கும் ஒரே பறவை இனம் கிவி மட்டுமே. இது இரவில் மட்டுமே தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே வந்து இரை தேடும்.

ஆயில்பேர்ட்

தென் அமெரிக்கா பகுதிகளில் அதிகமாக காணப்படும் பறவை இனங்களில் ஒன்று ஆயில்பேர்ட் பறவை ஆகும். இந்தப்பறவையும் தனது மோப்ப சக்தி மூலம் இரையை தேடுகிறது. கிவி பறவையைப்போல இதுவும் இரவில் மட்டுமே தனது இருப்பிடத்தை விட்டு வெளியே வந்து இரை தேடும். ஆனால் கிவிக்கு இரவில் கண் தெரியாது. இந்த ஆயில்பேர்ட் பறவைகளுக்கு இரவில் நன்றாக கண் தெரியும். இருப்பினும் மோப்ப சக்தி மூலம் தங்கள் இரையை தேடுகின்றன.

தேன் சிட்டு

சிட்டுக்குருவி இனத்தில் ஒரு வகை தேன் சிட்டு. இது உருவத்தில் சிறியது. ஆப்பிரிக்க காடுகளில் அதிகமாக இது காணப்படும். இந்த பறவையும் ே்்மாப்ப சக்தி மூலம் தனது இரையை தேடுகின்றது. தேன் கூடுகளில் உள்ள மெழுகு மற்றும் தேன் போன்றவை தான் இவற்றின் உணவு ஆகும். குறிப்பிட்ட தொலைவில் இருந்து தேன் கூட்டின் வாசனையை இவை அறியும் திறன் கொண்டவை.

புறா

புறாக்களுக்கும் மோப்ப சக்தி உண்டு. தங்கள் கூடுகளை வாசனை மூலம் இவை அறிகின்றன. மேலும் தங்கள் இருப்பிடம் உள்ள திசை மற்றும் அடையாளத்தை புறாக்கள் அறிந்து கொள்கின்றன. இதற்கு ஏற்ப இவற்றின் மூளை அமைப்பு உள்ளது.

கழுகு

கழுகு இனங்கள் இறந்த விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களின் உடல்களை தின்று உயிர்வாழ்கின்றன. எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அங்கிருந்து தரையில் உள்ள தனது இரையை பார்க்கும் அளவுக்கு துல்லியமான பார்வை கொண்டவை இவை. இந்த கழுகு இனத்தில் ஒன்று பிணந்தின்னி கழுகு. இவை அழுகிய உயிரினங்களின் உடல்களில் இருந்து வெளிப்படும் நாற்றத்தை மோப்பம் பிடித்து இரை தேடும் குணம் கொண்டவை. இறந்த உடல்கள் தரையில் புதைந்து கிடந்தாலும் அவற்றின் நாற்றத்தை உணரும் தன்மை இவற்றுக்கு உண்டு.

சாலமோன் மீன்

மீன் இனங்களில் ஒன்று அட்லாண்டிக் சாலமோன் மீன். இந்த வகை மீன்கள் அட்லாண்டிக் கடலின் கழிமுகப்பகுதியான ஆற்றில் பிறந்தவை. பிறந்த சில நாட்களில் சில சென்டி மீட்டர் நீளத்தில் இருக்கும் போது இவை கடல் பகுதியை நோக்கி நீந்திச்செல்கின்றன. பின்னர் இவை கடலில் வளர்ந்து வாலிபமாகி பின்னர் இனப்பெருக்கம் செய்ய மீண்டும் தாங்கள் பிறந்த ஆற்றுப்பகுதிக்கே திரும்புகின்றன. எந்த வழியாக ஆற்றில் இருந்து கடலுக்குச்சென்றதோ அந்த வழியாக இந்த வகை மீன்கள் மீண்டும் பயணம் செய்து தங்கள் பிறப்பிடம் வருகின்றன. இதற்கு அவற்றின் மோப்ப சக்தி பயன்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்