உயிரோடு தப்பி வந்த மனிதர்

திமிங்கலத்தின் வாயில் சிக்கி, உயிரோடு தப்பிவந்த மனிதர்

Update: 2019-04-12 07:29 GMT
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ரெய்னர் ஷிம்ப்பின் கதை, நம்பமுடியாத பிரம்மிப்பை உண்டாக்குகிறது. இவர் ‘புரூத்ஸ்’ எனப்படும் பிரம்மாண்ட திமிங்கலத்தின் தாடையில் சிக்கி, மீண்டும் உயிரோடு வெளிவந்திருக்கிறார்.

கடல் வாழ் உயிரினங்களின் மீது அதீத அன்பு காட்டும் ரெய்னர், அடிக்கடி கடலில் நீந்தியபடி மீன் கூட்டங்களை ரசிப்பதுண்டு. சிலசமயங்களில் கேமராவோடு கடலில் இறங்கி, மீன் கூட்டங்களை புகைப்படம் எடுப்பார். அன்றும் அப்படித்தான், தென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் கடலில் உலாவும் மத்தி மீன் கூட்டத்தை (சார்டின் மீன்), கடலில் நீந்தியபடி ரசித்திருந்தார். அந்தசமயம் மீன் கூட்டத்திற்கு நடுவே வந்த புரூத்ஸ் திமிங்கலம், திடீரென ரெய்னரை விழுங்க முற்பட்டது. இதில் ரெய்னரின் தலை முதல் இடுப்பு வரையிலான மேல் உடல் பாகங்கள் திமிங்கலத்தின் தாடைப்பகுதியில் சிக்கிக்கொண்டன. இந்த சம்பவத்தை படகில் இருந்தபடி, நேரில் பார்த்த ரெய்னரின் மனைவி சில்கியும், மற்றொரு புகைப்பட கலைஞரும் அதிர்ந்துவிட்டனர். என்ன நடக்கிறது?, ரெய்னருக்கு என்ன ஆனது? போன்ற கேள்விகளுக்கு இருவரும் பதில் தேடிக்கொண்டிருக்க, திமிங்கலத்தின் வாயில் சிக்கியிருந்த ரெய்னர் சில நொடிகளிலேயே உயிரோடு வெளியேவந்துவிட்டார்.

‘‘மீன் கூட்டத்தை விழுங்குதாக நினைத்து, புரூத்ஸ் திமிங்கலம் என்னையும் விழுங்க முற்பட்டது. ஆனால் வெகுசில நொடிகளிலேயே அதன் தவறை உணர்ந்தது போல, அழுத்தமான நீர் பாய்ச்சலோடு, என்னை வெளியில் தூக்கி வீசியது.

திமிங்கலத்திடம் இருந்து தப்பிப் பிழைத்த மகிழ்ச்சியில், அருகில் நின்ற படகில் ஏறி விழுந்தேன். என்னுடைய கேமரா உட்பட, கை-கால்கள் நன்றாக இயங்குவதை உணர்ந்தபோதுதான் போன உயிர் திரும்பி வந்தது. என்னுடைய 20 ஆண்டுகால வாழ்க்கையில், திமிங்கலத்தால் விழுங்கப்பட்டதையும், உயிரோடு வெளிவந்ததையும் மறக்கவே முடியாது’’ என்பவர், இந்த சம்பவத்திற்கு பிறகும் கடலில் தைரியமாக நீந்திக்கொண்டிருக்கிறார்.

மேலும் செய்திகள்