நாக்பூரில் முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர்

மராட்டியத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாக்பூரில் முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர்.

Update: 2019-04-11 23:46 GMT
நாக்பூர், 

மராட்டியத்தில் முதல்கட்டமாக 7 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாக்பூர் தொகுதியில் பல முக்கிய பிரமுகர்கள் ஓட்டுப்போட்டனர்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் பொதுச்செயலாளர் பையாஜி ஜோசி ஆகியோர் நாக்பூர் பாவுஜி தப்தாரி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட காலை 6.50 மணிக்கே வந்தனர். மோகன் பகவத் முதல் நபராக ஓட்டுப்போட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், மக்கள் பெருமளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மதியம் 12.20 மணிக்கு தனது மனைவி அம்ருதா மற்றும் தாய் சரிதாவுடன் நாக்பூர் தரம்பேத் ஷிந்தி உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போட்டார்.

இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தால், அது ஜனநாயகத்தை வலுப்படுத்தும்’ என்றார்.

மத்திய மந்திரியும், நாக்பூர் தொகுதி வேட்பாளருமான நிதின் கட்காரி காலை 10 மணியளவில் மகல் பகுதியில் உள்ள டவுன் ஹாலில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு தனது மனைவி, 2 மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் வந்து ஓட்டு போட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “கடந்த 5 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில், பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் எனக்கு மகத்தான வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். கடந்த தேர்தலை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என்றார்.

பண்டாரா-கோண்டியா நாடாளுமன்ற தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான பிரபுல் பட்டேல் தனது குடும்பத்தினருடன் வந்து ஓட்டு பதிவு செய்தார்.

மேலும் செய்திகள்