மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு - அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. பிரசாரம்

மாவட்டம் முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. பேசினார்.

Update: 2019-04-11 21:45 GMT
ஒட்டன்சத்திரம்,

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாதுபட்டி, அத்தப்பன்பட்டி, சின்னக்காம்பட்டி, பாறைப்பட்டி, எம்.அய்யம்பாளையம், மார்க்கம்பட்டி, குத்திலுப்பை, வாடிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வேட்பாளருடன் சென்று அவர் நேற்று வாக்கு சேகரித்தார். ஒட்டன்சத்திரம் காந்திநகர் பகுதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும். 5 பவுனுக்கு குறைவாக வைத்த நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்.

100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். நமது வேட்பாளர் வேலுச்சாமியை எளிதில் நீங்கள் அணுகலாம். உங்களது குறைகள், கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.

பெண்களுக்கு தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும். சமையல் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நகராட்சி பகுதியில் உள்ள கட்டிடங்களுக்கு உயர்த்தப்பட்ட வரி குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. பேசினார். இந்த பிரசாரத்தில் நகர செயலாளர் வெள்ளைச்சாமி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்